Thursday, 16 November 2017

தகுதியில்லாத தலைவர்கள்

லஸ் சர்ச் சிக்னலில், அஜாந்தாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிக்னல் விழ, பல்லவன் விரைய, பல்லவன் பின் ஒரு வரிசையில் நானும், திடீரென ஒரு சைக்கிளோட்டி பல்லவனுக்கும் காருக்கும் குறுக்கே வர, வழிவிட்டு நிற்க, வலதுபுறத்தில் இருந்து தவறான வழியில் வந்து ஒரு ஆட்டோ காரையொட்டி இடித்துக்கொண்டு நிற்க, சாலையில் பிரச்சனை வேண்டாமென்று சைக்கிள் சென்றபின் முன்னோக்கி நகர, முழுபோதையில் ஒரு பெரியவர் மீடியனைத் தாண்டி குறுக்கே குதிக்க, அவருக்காகவும் நான் வண்டியை நிறுத்த, சைடில் இருந்த ஆட்டோ ஓட்டி இப்போது வாகனத்தின் பின்னே இடிக்க, அப்போதும் பொறுமை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு நகர, அதன்பின் அந்த ஆட்டோ ஓட்டுநர் (அவரும் போதையில்) சொன்னதுதான் கொடுமை, "குறுக்கே ஆள் வந்தா வண்டிய நிறுத்திடுவியா, போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே?" ஒருவேளை எனக்கு முன் அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்றிருந்தால் அந்த குடிகார பெரியவரும், சிக்னலை மதிக்காத சைக்கிளோட்டியும் பரலோகம் சென்றிருப்பார்கள், அவ்வளவு குடி, அத்தனை வேகம், அத்தனை அலட்சியம், வார்த்தைகளில் பெருத்த மரியாதை! கண்ணுக்கெட்டியவரை காவல்துறையைக் காணவில்லை!

சாலையில் முதலில் அமைச்சர்கள் விதிகளைப் புறக்கணித்து, போக்குவரத்தை நிறுத்தி விரைந்தார்கள், பின்பு பல்லவன் போக்குவரத்து ஓட்டுநர்கள் சில நிறுத்தங்களிலும் பல சிக்னல்களிலும் நிற்காமல் ஓட்டினார்கள், இப்போதும் அப்படியே, பிறகு நிறைய மினி ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ஆட்டோக்கள் எல்லாம் யாருடைய பினாமி சொத்தாக மாறிய தெம்பில், அல்லது தினமும் நான் மாமூல் கொடுக்கிறேன் என்று சிலர் எதையும் மதிக்காமல், யார் எப்படி போனால் என்ன என்று இருசக்கர வாகனங்கள் மற்றவர்களுக்கு உயிர்பயம் காட்டி எல்லாத்திசைகளிலும் விரைகின்றனர், மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவற்றின் மேலே மட்டும்தான் அவர்கள் வாகனம் ஓட்டவில்லை!

விநாயகர் ஊர்வலம், வேளாங்கண்ணி ஊர்வலம், ஏதோ ஒரு சவ ஊர்வலம், திருமண ஊர்வலம், கட்சி மீட்டிங் என்று எதற்கெதற்கோ சாலை முடக்கப்படுகிறது, உடல்நிலை சரியில்லாத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, மருத்துமனைக்குச் செல்லும் சாலை மறிக்கப்பட்டதால், நண்பர் ஒருவரை, இரவு நேரத்தில் எத்தனை கெஞ்சியும் இரண்டு கிலோமீட்டர்கள் சுற்ற வைத்திருக்கிறார்கள் காவல்துறையினர்!

ஒரு சவ ஊர்வலத்தில், ராயப்பேட்டையின் மேம்பாலத்தின் கீழே, சாலை முடக்கப்பட காத்திருந்த நேரத்தில், நேரெதிரே வந்த ஊர்வலத்தில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன், அந்தப்பக்கம் கணவனோடு பின்னே அமர்ந்திருந்த நடுத்தர மார்வாடிப் பெண்ணின் மீது பட்டாசைத் தூக்கி எறிந்தான், உடன் வந்த ஒற்றைக்காவலர் ஒன்றும் கேட்கவில்லை!
குடித்துவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது என்னும் அரசு மதுக்கடைகளையும், அதனுடன் பார்களையும், பார்க்கிங் வசதியுடன் நடத்துகிறது, நீட் டுக்கு அனுமதியளித்ததைப் போல அறிவார்ந்த செயல்தான் இது!

நாட்டில் இப்போதெல்லாம் குற்றங்களுக்கு பஞ்சமில்லை, விபத்துக்களுக்கும் பஞ்சமில்லை, பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கும் பஞ்சமில்லை! தவறு செய்பவன் எல்லாம் "பணம்" கொடுத்தால் போதும் என்ற மனநிலையை நோக்கி நகர்ந்து ஆண்டுகள் பலவாயிற்று!

பதவி, பணம் என்ற குறிக்கோளில் நகரும் ஆட்சியாளார்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் செயல்திறன் எல்லாம் வேறு எதிலோ இருக்கிறது, அதே பணம் கொடுத்தால் ஓட்டும், தப்பு செய்தால் பணம் கொடுத்துத் தப்பிக்கலாம் என்ற மனநிலையில் பெரும்பான்மையான மக்களும் வந்து நாளாயிற்று!

சாராயம், பணம் என்ற புள்ளிகளில் உயிர்ப்பலிகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன!
தகுதியில்லாத தலைவர்களால் நாடு என்ன ஆகும் என்பதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம்!
#நீட், #Roadsafety #Chennai_Traffic

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!