Thursday 16 November 2017

தெய்வம் நின்று கொல்லும்

மகளின் நடனவகுப்பு முடிய அந்தத்தெருவில் காத்துக்கொண்டிருந்தேன், நான்கு சிறுவர்கள், மிகவும் எளிய வீட்டுப்பிள்ளைகள் என்று உடையில் தெரிந்தது, ஒருவன் நொண்டிக்கொண்டே வர, மற்ற மூவரும் அவனையொட்டி நான் அமர்ந்திருந்த வாயிற்படியில் வந்து உடன் அமர்ந்தனர்!
"என்னடா ஆச்சு?"
"அக்கா இவன் காலில் முள்ளூ குத்திடுச்சுக்கா" என்று நொண்டியவனை கைக்காட்ட,
"எங்கே பார்க்கலாம்", என்று அவன் பாதத்தில் குத்தியிருந்த சிறு கண்ணாடித்துகளை நகங்களின் மூலம் எடுத்துவிட்டேன். "ஏண்டா செருப்பு போட்டு நடக்கக்கூடாது", என்று கேட்டுவிட்டு அவர்களின் எளிய கோலத்தை பார்த்துவிட்டு மிக அபத்தமான கேள்வியாய் உணர்ந்தேன்!

சிறிது நேரம் அவர்கள் அமர்ந்திருக்க, பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு வடநாட்டுச் சிறுவன் ஒரு ஐஸ்கிரீம் வண்டியைத் தள்ளிக்கொண்டு போக, சும்மா இருந்த சிறுவர்களில் ஒருவன் அவனை நோக்கி "ஏய்" என்று குரலெழுப்ப, அந்தச்சிறுவன் வண்டியை அப்படியே விட்டுவிட்டு முஷ்டியை மடக்கிக்கொண்டு இவர்களை அடிக்கவர, பிறகு நான் நடுவே குரல் கொடுத்து இருவரையும் அதட்ட பிறகு விலகினார்கள், இதற்குள் இரண்டு இளைஞர்கள் வேண்டுமென்று அருகில் வந்து என்ன பிரச்சனையென்று கேட்க, சிறுவர்கள் சட்டென்று, "ஒன்னுமில்ல, எங்கால்ல முள்ளூ குத்திடிச்சி, அக்கா எடுத்துவுட்டாங்க, நீ கெளம்புண்ணா" என்று சமர்த்தாய் அவர்களை கழட்டிவிட்டு இவர்களும் விலகிப்போனார்கள்!

இளைஞர்களை அந்தப்பக்கம் அனுப்பிவிட்டு மறுபுறம் சென்ற பிள்ளைகள் ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் என்புறம் வந்து அமர்ந்தார்கள். "அக்கா சாரிக்கா, அவனுங்க சரியில்ல, ஏரியாவுல குடிச்சிட்டு கலாட்டா பண்ணுவானுங்க, அதான் போயிட்டோம்" என்று காலில் முள் தைத்துக்கொண்டவன் கூற, பிறகு பொதுவாக அவர்கள் படிப்பைப் பற்றி விசாரிக்க, அவர்களுக்கு முறையே ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வயதென்றார்கள், அவர்களையெல்லாம் ஏழு, எட்டு வயதுக்குமேல் இருப்பார்கள் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை, "ஏண்டா, ஒழுங்கா சாப்பிடுறீங்களா இல்லையா, என்று அவர்களிடம் மேலும் பேச்சை வளர்க்க, அவர்கள் சொன்னது எல்லாம் இன்னமும் மனதுக்குள் ரீங்காரிமிட்டுக்கொண்டிருக்கிறது!

"அக்கா, இவன் (காலில் முள் தைத்துக்கொண்டவன், ஒன்பது வயது) இவங்கப்பா குடிக்குறத விட்டா தீ மதிக்கிறேன்னு வேண்டிட்டு இருக்கான்கா லூசு"
"ஆமாங்க்கா, அம்மாவே போட்டு அடிக்கிறாரு, குடிச்சிட்டு வாந்தியெடுக்குறாருகா, படிக்கவே முடியலக்கா"
"அக்கா, இவன் வெறும் சோத்தை தின்றாங்கா, அவங்க குழப்பு வைக்கலன்னா அவங்க சித்திக்கிட்ட கேட்டு சாப்பிடலாம் இல்லக்கா"
"என் சித்திப்பையனுக்கு ஆறு வயசுதான்கா, அவனுக்கும் அவங்கப்பா சாராயம் குடுக்குறாருக்கா"
"சித்திக்கிட்ட சொன்னா கண்டுக்கவேயில்லக்கா, அவங்க நாயிக்குகூட சாராயம் ஊத்துறாங்க, அவங்ககிட்ட எப்படிக்கா கொழம்பு கேக்குறது?"
"அக்கா எங்கண்ணனுக்கு 12 வயசுக்கா, ஸ்கூலுக்கு வராம பாக்கு போடறான்க்கா"
"அக்கா இவன் குளிக்கறதே இல்லகா, சும்மா படிக்காம பீச்சுக்கு போலான்னு கூப்புடுட்டே இருக்கான்கா"
"அக்கா குடிச்சா, பாக்கு போட்டா இன்னக்கா ஆகும்?"
எளியப்பிள்ளைகளுக்கு என்னால் முடிந்ததை, தெரிந்ததைச் சொன்னேன், அறிவியல் ரீதியாக நிறைய கேள்விக்கேட்டார்கள், குடியை வெறுத்து, மனதை திசைத்திருப்பாமல், கல்வியை விரும்பும்படி சொன்னேன், இந்தக்குழந்தைகள் வளர்வதற்குள், சாராயத்தில் தமிழகத்தை மூழ்கடித்த, மூழ்கடிக்கும் இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகள் செத்துவிட வேண்டும், எப்போதும் தம் ஊதியத்துக்காக மட்டும் போராடும் ஆசியர்களாய் இல்லாமல், எளியப்பிள்ளைகளுக்கும் புரியும் வண்ணம், அறிவார்ந்த, அன்பு நிறைந்த ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டேன்!

தமிழகத்தில் ஆண்ட, ஆளும் ஊழல் அரசியல்வாதிகள், சாராயத்தை எளிமையாக்கி, கல்வியை எட்டாக்கனியாக மாற்றியிருக்கின்றனர், குடியால் தம் பிள்ளை, மனைவி, பிள்ளைகளை செய்த கொடுமை தாங்காமல், பெற்ற தாயே மகனை கொன்று, மடியில் போட்டு அழுத செய்திக்கண்டேன், மனம் கனத்துப்போனது! தினம் தினம் குடும்பங்கள் சாக, புதிதுப்புதிதாய் மதுக்கடைகள் திறப்புவிழா, அரசு கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா, இவர்கள் பணத்தை மட்டும் சேர்க்கவில்லை, பெரும் பாவத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள், பாவத்தில் பங்கு உள்ள யாருக்கும் மரணம் அத்தனை இலகுவாய் இருக்கப்போவதில்லை! தெய்வம் நின்று கொல்லுமாம், கொல்லட்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!