Thursday 16 November 2017

த்தூஊஊஊஊ_வென_தூவும்_மழை

No automatic alt text available.


இந்தத் தேசத்தில்
மக்கள்
தண்ணீரில் மூழ்கி
மடிகிறார்கள்
வறட்சியில் வாடி
மறைகிறார்கள்

சில்லறை கடன்களுக்காக
வங்கியின் பிடியில்
சாகிறார்கள்
விவசாயத்தை நம்பி
மண்ணில்
சாய்கிறார்கள்

மேடு பள்ளங்களான
சாலைகளில்
சிக்கி உடல்
சிதறுகிறார்கள்
கந்து வட்டிக்கொடுமையால்
தீக்குளித்து
எரிகிறார்கள்

கல்விக்கனவு கலைந்து
தூக்கில் தொங்குகிறார்கள்
பேருந்து ஓட்டையில்
மின்தூக்கியில்
நீச்சல் குளத்தில்
ஆழ்துளை கிணறுகளில்
டெங்கு காய்ச்சலில்
பிள்ளைகள்
பலியிடப்படுகிறார்கள்
கட்டிடங்கள் இடிந்து
சமாதியாடைகிறார்கள்

விசாரணை கைதிகளாக
சாமன்யர்கள்
மாண்டுபோகிறார்கள்
சிறைச்சாலைகளை
ஊழல் குற்றவாளிகள்
ஏமாற்றித் திரிகிறார்கள்

போலி மருந்துகளில்
உயிர் துறக்கிறார்கள்
கலப்பட உணவில்
கண்மூடுகிறார்கள்
சாதிமத பூசல்களில்
மண்டையுடைக்கப்படுகிறார்கள்

எதிர்த்துப்பேசுபவர்கள்
காணாமல் போகிறார்கள்
பிள்ளைகளும் பெண்களும்
புணரப்படுகிறார்கள்

யாரோ குழந்தைகள்
தெருவில்
பிச்சைக்காரர்களாக்கப்படுகிறார்கள்
சாராயக்கடைகளில்
பல அப்பன்கள்
சாந்தியடைகிறார்கள்
கொத்தடிமைகள்
நகரெங்கும் விரவிக்கிடக்கிறார்கள்

உழைத்தப்பணம் மாற்ற
வங்கியின் வாசலில்
ஏழைகள் சுருண்டுவிழுகிறார்கள்
கோடியில் கொள்றையடித்தவனின்
கணக்குகளை கைகழுவுகிறார்கள்

இத்தனையும்
நிகழும் நாட்டில்
வெள்ளைவேட்டிகளும்
அதிகாரச்சீருடைகளும்
குர்தாக்களும் பைஜாமக்களும்
கொஞ்சமும் கூச்சக்கறையின்றி
பற்களைக் காட்டிக்கொண்டு
வீதியுலா வருகிறது
"கர்ர் த்தூஊஊஊஊ"
என்று பெருமழை
ஆர்ப்பரிக்கிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!