Thursday, 16 November 2017

சுவையற்ற_தொடர்கதைகள்

Image may contain: one or more people and people sitting


அவனுக்குச் சரியான படிப்பில்லை,
குடிகார அப்பனுக்கும் அதில்
அக்கறையில்லை!
அரசாங்கப் பள்ளியில் படிக்கவைக்கவும்
அண்டை அயலாருக்கு நேரமில்லை!

முதலில் அவன் புகைத்தான்
வான் மண்டலத்தில் விழும் ஓட்டைக்கு
இரண்டு சதவீதப் பங்கு
இந்தப் புகைக்கும் உண்டென்று
யாரும் அவனிடம் சொல்லவில்லை
இந்தப்புகை உன் மூச்சுக்குழாயில்
ஓட்டைகள் போட்டுவிடும்
என்ற எச்சரிக்கை விளம்பரங்களை
அவனும் கண்டுகொள்ளவில்லை!

அடுத்த வீட்டில்
ஒழுங்காய் படித்துக்கொண்டிருந்தவனும்
அவனுடன் புகைத்தான்
தறுதலைகள் என்ற ஆசிரியர்கள்
கண்டிக்கவில்லை!

புகைத்தவனும்
நன்கு படித்தவனும்
சினிமாவின் பக்கம் போய்
எடுபிடி வேலைகள் செய்தார்கள்
யாரும் தடுக்கவில்லை!
சாதிக்கட்சியின் தலைவரிடம்
அடிமையானார்கள்
உற்றார் உறவினர் விடுவிக்கவில்லை!

அவனும் இன்னொருவனும்
புகைத்தலில் தொடங்கிக் கடத்தலில்
வந்து நின்றார்கள்
காவல்துறை கைதுசெய்யவில்லை!
சாதியக் கட்சித்தாண்டி
பல கட்சித்தலைவர்களுக்கு அவன்
பரிச்சயம் ஆனான்
தலைவருக்காக ஒருவனைக் கொளுத்தி
தீக்குளித்த செய்தியாக்கினான்
சதியை ஊடங்கங்கள் கண்டுகொள்ளவில்லை!

புகைத்தலில் தடம் மாறிய அவனும்
அவனால் தடம் மாறிய அவனும்
இப்படியே வளர்ந்து
சாராயக்கடை அதிபர்கள் ஆனார்கள்
குடும்பத்தினர் நியாயம் கற்பிக்கவில்லை!

வருடங்கள் கரைந்து
அவர்கள் கல்வித்தந்தையானார்கள்
கல்வியாளர்கள் கேள்வி கேட்கவில்லை
வேடந்தரித்த சாமியார்களிடம்
கைகோர்த்தார்கள்
பின் அரசியலில் நுழைந்து தேர்தலில்
நின்றார்கள்
மக்கள் பின்புலம் பார்க்கவில்லை!
அவர்கள் ஜெயித்து மந்திரிகளும்
ஆனார்கள்
நாடும் நாசமாய்ப் போனது
யாரும் அதைபற்றிக் கவலைகொள்ளவில்லை!

முடிவேயில்லாத இந்த நிதர்சனங்களை
எந்த நீதித்துறையும் மாற்றியமைப்பதில்லை
நிதியொன்றே போதுமென்ற மனநிலையில்
ஜனநாயக சதிகளைப்பற்றியோ
பறிபோகும் உரிமைகளைப்பற்றியோ
மக்களும் வருத்தப்படுவதில்லை!

அட போகட்டுமே
இதுவெல்லாம் சுவையற்ற தொடர்கதை
முடிக்கும்வரை முடிவில்லை!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!