Thursday, 16 November 2017

மனைவியின்_பிள்ளையும்_கணவனின்_குழந்தையும்!










No automatic alt text available.
கொடுங்கையூரில் மாற்றுக்காதலால் சேர்ந்து வாழ்ந்த ஜோடியில் ஆணொருவன், மனைவிக்கு முதல் கணவன் வழி இருந்த மூன்று வயது ஆண் குழந்தையை, விடாமல் அழுததற்காக சுவற்றில் அடித்து கொன்றுவிட்டு பின்பு படிக்கட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியிருக்கிறான் என்ற செய்தியும், இறந்து போன அந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் காண நேர்ந்தது! சிறிது நாட்களுக்கு முன்னர் இரண்டாம் திருமணம் செய்த பெண், கணவனின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியையும் படிக்க நேர்ந்தது, அவ்வப்போது "சித்தி" கொடுமை என்ற கண்ணீர் கதைகளையும் கேட்க நேர்கிறது, இவையெல்லாவற்றையும் சாதாரண செய்திகள் என்று கடக்க முடிவதில்லை!

அதிலும் இதுபோன்ற எல்லா திருமணங்களிலும், உறவுகளிலும், கணவனுக்கு முந்தைய வழி வந்த குழந்தையோ, அல்லது மனைவி வழி வந்த குழந்தையோ பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை!

கொலை செய்யும் அளவுக்கு பெரும்பாலும் "சித்திகள்" செல்வதில்லை, ஆனால் கொலையையும் எளிதாக செய்ய முடிகிறது ஆண்களால், ராயப்பேட்டையில் இரண்டாவது கணவன், மனைவி, அவளது பெண் குழந்தைகள் என்று வரிசையாய் ஐந்துபேரை கொன்றது நினைவில் இருக்கலாம்!
இரண்டாவது மனைவி அவள் குழந்தையென்றில்லை, நடைபாதையில் வசிக்கும் ஒரு கூலித்தொழிலாளி, தன் ஒரு வயது ஆண் குழந்தை சாலையோரத்தில் தூளியில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், மனைவியுடன் உறவுக்கு முற்பட்ட நிலையில், உறங்கிய குழந்தை பசிக்கு அழ, அந்த எரிச்சலில் அந்தத் தூளியை மரத்தில் மோதி குழந்தையைக் கொன்ற செய்தியும் உண்டு!

"ஒருவனை காதலிப்பவள் திருமணம் ஆனதும் அவனின் குடும்பத்தையே மணம் செய்து கொண்டவள் ஆகிறாள் என்றும், ஒருத்தியை காதலிக்கும் ஆண், அவளை மட்டுமே திருமணம் செய்துகொள்கிறான்" என்று ஒரு முதுமொழி உண்டு! இதன் காரணம் என்ன? கலாச்சாரம் என்பதையும் தாண்டி, ஆண்களின் வளர்ப்பு மனநிலையே பெரும்பாலும் காரணம்!

குடித்தால், புகைத்தால், ஒழுக்கம் கெட்டால், திருடினால், கொலை செய்தால், வேறொரு திருமணம் செய்தால், பலதார உறவு கொண்டால், இந்த எல்லா "ல்" களையும் ஆண்கள் செய்யும்போது, சாதாரண அன்றாட நிகழ்வாகவும், இதில் எதை ஒன்றையாவது பெண் செய்தால், "கலாச்சாரம், ஒழுக்கம்" என்று பெண்ணுக்கு போதிக்க ஆரம்பிக்கிறோம்!

மனப்பொருத்தம் இல்லையென்றாலும், மணவாழ்க்கையை பலர் சகித்துக்கொண்டு கடப்பதற்கு காரணம் குழந்தைகளே, அதுபோன்ற பல தகப்பன்களின், தாய்களின் சகிப்புத்தன்மைக்குப் பின்னேதான் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது! குழந்தைக்கே அச்சுறுத்தலாகும் போது கணவனை விட்டு பிரிதலும், கொலை செய்யும் அளவுக்கும் பெண்கள் செல்வது உண்டு! "பாதுகாப்பு" என்ற வளையம் கூட பெரும்பாலும் "பொருளாதாரம்" "சமூகம்" என்ற இரண்டையுமே சுற்றி வருகிறது!

பெற்றவர்கள், பெண்ணுக்கு படிப்பெதற்கு, சுய காலில் நிற்பதெதற்கு என்று பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைக்க, ஒருவேளை அவன் குடிகாரனாகவோ, மோசமானவனாகவோ இருக்க நேர்ந்தால், சுய சம்பாத்தியம் இல்லாத பெண்ணுக்கு எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவனையே சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது, சுய சம்பாத்தியம் இருந்தாலும், "போதனைகள் செய்யும் சமூகம்" என்ன சொல்லும் என்ற அச்சமும், தனியாக நின்றாலும் சீண்டும், இரண்டாவது திருமணம் செய்தாலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்ற எண்ணமும் அதே சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது!

மும்பையில் கணவன் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்ட, குடும்பத்தைத் தாங்கிப்பிடித்த மனைவி சுயதொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற, கணவனும் மனைவியும் குழந்தைகளும் என்று அருமையாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், பெண் தனியே இத்தனை சம்பாதிப்பதா என்ற காழ்ப்பில், அவளின் கணவனின் அண்ணனே படுகொலை செய்திருக்கிறான், கிடைத்திருக்கும் சிறிய அளவிலான பெண் சுதந்திரம் கூட பல ஆண்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், கணவனை அண்டியோ, விவாகரத்து ஆகிவிட்டால் இன்னொருவனை கணவனாக அண்டியோ வாழும் நிலையே பெரும்பாலான பெண்களுக்கு!

பெண்ணின் உணர்வை, உரிமையை, சுதந்திரத்தை மதிக்கும் பெரிய மனது வருங்கால ஆண்களுக்கு வரலாம், அப்போது இதுபோன்ற பிரச்சனைகள் குறையலாம்! அதுவரை வளர்ந்துவிட்ட ஆண்பிள்ளைகளின் மனதை மாற்றுவது கடினம்தான்!

குழந்தைகள் மீதான அன்பு, பாசம் எல்லாம், பெரும்பாலான ஆண்களுக்கு காமத்தின் சீற்றத்தில் மரித்துபோய்விடும், அதன் விளைவே இதுபோன்ற கொலைகள், குழந்தைகளின் மீதான வன்புணர்ச்சி குற்றங்கள்! இத்தனை காமச்சீற்றத்திலும், இதுதான் ஆண் இயல்பு என்று சப்பைக்கட்டினாலும், எந்த ஆணும் எத்தனை தேவையிலும் தன் தாயை புணர்வதில்லை, தாயென்றும் சகோதரியென்றும் இரத்தப்பாசமும், வளர்ந்துவிட்ட கட்டுப்பாடும் இருக்கிறது, குடித்துவிட்டால் எதுவும் தெரியாது, பாவம் என்பார்கள், என்ன குடித்தாலும் ஒருவன் சரியாய் தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியை சாலையில் இழுத்துபோட்டு அடிக்கும் அளவுக்கு அவனுக்கு தெளிவு இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

போதை, காமம், எதையும் கட்டுப்படுத்த பெண்களுக்கு முடியும்போது, முடியவேண்டும் என்று சமூகம் கட்டமைத்து வளர்த்துவிட்டிருக்கும்போது, ஆண்களுக்கு ஏன் அதுமுடியாது? பெண் கோபப்பட்டால் ஆகாது என்று அடக்கும் பெற்றோர், ஆண்பிள்ளை கோபப்பட்டால், அதே வார்த்தைகளைச் சொல்லாமல் ரசித்து மகிழும் நிலையில் வளர்ந்த அவன் இதுபோல் தன்பிள்ளையையோ, தன்னை நம்பி வந்தவளின் பிள்ளையையோ ஆத்திரத்தில் கொலைச்செய்வான்!

இங்கே மாற்றுக்காதல் சரியா? தவறா? பெண்ணுக்கு ஒழுக்கம் வேண்டுமா? வேண்டாமா? என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை, அதுபோன்ற கேள்விகளை எழுப்பவும் இல்லை! எனக்கு நயன்தாராவையும், கமலையும் பிடிக்கும், இருவருமே அடுத்தடுத்து வேறு துணைகளை தேடிக்கொண்டதாலா என்று குதர்க்கமாய் கேள்வி எழுப்பாதீர்கள், இருவருமே வெளிப்படையானவர்கள், இருவருமே தான் பிரிந்த துணைகளை பற்றி எந்த அவதூறோ குறையோ சொல்லாதவர்கள், நீங்கள் வானாளவ போற்றினாலும், கழுவியூற்றினாலும் எல்லாவற்றையுமே ஒரு புன்சிரிப்பில் கடப்பவர்கள்!

உண்மையில் "என் வாழ்க்கை என் சுதந்திரம்" என்று வாழ்வது அத்தனை எளிதான காரியமல்ல, எனினும் குழந்தைகள் இருந்தாலும் கமலுக்கு கிடைத்த அந்தச் சுதந்திரம், குழந்தைகள் இருந்திருந்தால் நயனுக்கு கிடைத்திருக்குமா என்பது பெருத்த சந்தேகமே! பெண்ணின் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள ஆண்கள் இன்னமும் பக்குவபடவில்லை, இப்படிப்பட்ட சமூகத்தில், ஆணோ, பெண்ணோ, சேர்ந்து வாழும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளும் முன்னர், திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன்னர், முதல் திருமணம் என்றாலும் இரண்டாம் திருமணம் என்றாலும், "பிறக்கும் பிள்ளைகள்", "பிறக்கப்போகும் பிள்ளைகள்" எல்லாம் பெரும் பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நம்மால் உருவாக்கப்பட்ட உயிர்களுக்கு நாமே பாதுகாப்பு, பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நாம் உருவாக்கியதில்லை என்றாலும், துணையென்று நாம் தேர்ந்தெடுத்தவரின் வழி வந்ததால், துணைக்கு எப்படி பொறுப்போ அதே பொறுப்பை அந்தக் குழந்தைக்கும் காட்டியாக வேண்டும் என்று உணர்தல் வேண்டும், துணையிடம் காட்டும் அன்பையும் பரிவையும் அவளின்/அவனின் குழந்தைகளிடமும் காட்ட வேண்டும்! தான் பெற்றதோ, துணை பெற்றதோ, குழந்தைகள் பாரம் என்று கருதினால் உங்களின் தேவை காமம் மட்டுமே என்றறிக! பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க!

தெளிவாய் இருந்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது ஒன்றுமறியா பிஞ்சுகளின் உயிர் போகாது! அவர்களின் வாழ்க்கை அவர்களின் உரிமையும்தானே?!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...