Thursday, 16 November 2017

அவர்களும்_நாங்களும்

No automatic alt text available. 
அவர்கள்
சுவாதியைக்
கொல்லப்பட்ட பெண்
என்றார்கள்
அனிதாவை
செத்துப்போன கோழை
தலித்
என்கிறார்கள்

அவர்கள்
முஸ்லீம்களை
தீவிரவாதிகள்
என்றார்கள்
இந்துத்வா போர்வையில்
சகமனிதர்களை
கொல்பவனை
போராளி
என்கிறார்கள்

அவர்கள்
இந்தியைத்
திணிப்பது அவசியம்
என்றார்கள்
தமிழை நேசிக்கிறோம்
நீலிக்கண்ணீரை
நம்புங்கள்
என்கிறார்கள்

அவர்கள்
வன்புணர்ச்சிக்கு
ஆட்படும் பெண்கள்
கொலையைத் தவிர்க்க
எதிர்க்கக்கூடாது
என்றார்கள்
மக்களை இகழ்ந்த
பெண்ணை மந்திரியாக்கி
சமூகநிதி காக்கிறோம்
என்கிறார்கள்

அவர்கள்
மாடுகள்
கடவுளுக்கு சமம்
என்றார்கள்
சகமனிதனின்
குருதியை
வெட்டிச் சுவைத்து
ஒன்றுப்பட்ட
தேசம்
என்கிறார்கள்

அவர்கள்
கிரிக்கெட்
தோல்வியில்
கொதிப்படைந்து
வேதனை
என்றார்கள்
மூச்சுக்குத் தவித்து
மாயும் குழந்தைகளின்
சடலங்களைக் கடந்து
இது சாதாரணம்
என்கிறார்கள்

அவர்கள்
அதானிகளிடமும்
அம்பானிகளிடமும்
கருணைக்காட்டி
தொழில் முன்னேற்றம்
என்றார்கள்
போராடிக் காயும்
விவசாயிகளின்
கண்களையும் பார்க்க
மறுத்து
வயிற்றுவலி தற்கொலைகள்
என்கிறார்கள்

அவர்கள்
ஒரே தேசம்
ஒரே வரி
என்றார்கள்
பெட்ரோலையும்
டீசலையும்
பிரித்து
அபரிதமான வரிகளால்
விலையேற்றி
விலைவாசிகளை
குறைக்கிறோம்
என்கிறார்கள்

அவர்கள்
சுத்தமான இந்தியா
என்றார்கள்
கங்கையையும்
யமுனையையும்
சாமியார்களிடம்
தந்து
அசுத்தப்படுத்தி
புண்ணியம்
என்கிறார்கள்

அவர்கள்
கல்வியைத்
தரமாக்குவோம்
என்றார்கள்
ஏழைகளை ஒதுக்கி
மேல்மட்டம் மட்டும்
பயிலும் வகையில்
தேர்வுமுறை உருவாக்கி
தரம் தராதரம்
என்கிறார்கள்

அவர்கள்
கருத்துச்சுதந்திரத்தின்
பிரதிநிதிகள் நாங்கள்
என்றார்கள்
மற்றவர்களின்
கருத்துச்சுதந்திரத்தின்
நெஞ்சுகளுக்கு
குண்டுகளே பரிசு
என்கிறார்கள்

கட்சிகளுக்குள்
பயணம் செய்து
அரசியலில் எதிரியில்லை
என்பார்கள்
அத்தனையும் சகித்துக்கொண்டு
ஓட்டுப்போடும் வாக்களார்களுக்கு
அதே இத்துப்போன வாக்குறுதிகளை
அடுத்த தேர்தலிலும் தருவார்கள்

இப்படி அவர்கள்
எத்தனையோ
சொல்கிறார்கள்
வேறு எதையோ
செய்கிறார்கள்
ஒவ்வொரு முறையும்
ஏமாற்றிவிட்டு
மக்கள்பணியே கடமையென்று
கண்துடைப்பு நாடகம்
நடத்திவிட்டு
பின்
கும்பிட்டு நகர்கிறார்கள்!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!