Thursday, 16 November 2017

இந்திய_மக்களும்_சோதனைக்கூட_எலிகளும்

Image may contain: one or more people

 ஸ்பெயினில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளியால் உடலில் பயங்கரமான மாறுதல்கள் ஏற்பட்டு ஒருவர் மரணம், அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளியால் என்றும், அதில் இருந்த மருந்து எதிர்ப்பணுக்கள், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை செயல்பட விடாமல் தடுத்துவிட்டது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்! நம் நாட்டில் என்றோ இதை விவசாயிகளும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூட கணித்துவிட்டிருக்கலாம், இருந்தாலும் உணவுத்துறையில், மருத்துவத்துறையில் விளையாடும் பெரும் அரசியல் இந்த உண்மைகளை மூடி மறைக்கிறது, மறுக்கிறது!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கேவிண்டிஷ் வாழைப்பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படும்போது, அது ஏன் விற்கப்படுகிறது? சீனப் பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு, அதை இறக்குமதி செய்வதற்கு எந்த தடையுமில்லாததை போலவே இதுவும்!

பெருகி வரும் மக்கள் தொகையை காரணம் காட்டி இரசாயன உரங்களைக் கொண்டு விளைச்சலை அதிகப்படுத்தி வியாதிகளையும் அதிகப்படுத்தினர், பின் மருந்துகளை புதிதுப்புதிதாக அறிமுகப்படுத்தினர், பின் மருத்துவமனைகளை, பின் மருத்துவத்தை ஒரு கவர்ச்சியான பணம் செய்யும் துறையாக மாற்றினர், பின் உயிர்களை காப்பாற்றத் துடிக்கும் எளியவர்கள் தேர்ந்தெடுத்தத் துறையை, அவர்களின் வரவை குலைக்கும் விதமாக நீட் என்ற தேர்வை நுழைத்து, மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்!

பற்பசையில் பழைய முறையை பழித்து, பின் அதையே கலந்து இயற்கை பற்பசை என்று ஆரம்பித்து, கடலையெண்ணையில் கைவைத்து, ரீபைண்ட் எண்ணெய் என்று அறிமுகப்படுத்தி, இப்போது செக்கு எண்ணெய் என்று அதையே சந்தைப்படுத்தி, கேழ்வரகை பழித்து, பின் அதையே ஃப்ளேக்ஸ் என்று அறிமுகப்படுத்தி, ஓட்ஸை முதன்மைப்படுத்தி, மஞ்சளை அழகுக்கு எதிரானதாக முரண்படுத்தி, அதையே க்ரீம்களாக கொண்டு வந்து, இப்படி இயற்கைக்கு முரணாக ஒவ்வொன்றையும் செய்து, இறுதியில் தோற்றுக்கொண்டிருக்கிறோம், வேர்க்கடலைக்கு
பின்னே இருந்த பன்னாட்டு வியாபரத்தைப்போல ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஏதோ ஒரு விஞ்ஞானியின் ஆர்வக்கோளாறும், சுயநலமும், பன்னாட்டு அரசியல் அழுத்தமும் இருந்துக்கொண்டே வந்திருக்கிறது!

உணவுதான் இப்படியென்றால் மருந்துகள் எப்படி? ஒரு ஆங்கில மருந்து, சந்தையில் கண்டுப்பிடித்தவுடனே வந்துவிடுவதில்லை, அது பல்வேறு சோதனைகளைக் கடந்து, அரசாங்க அனுமதிப்பெற்று, எல்லாவற்றையும் கடந்து (கவனித்துவிட்டு?!) வருகிறது, அப்படி வந்து, அறிமுகப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்து பின் திடீரென அது அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது, பின் சிலநாளில்/மாதங்களில் விற்பனைக்கு வருகிறது, ஏன்? முதலில் அனுமதிக்கொடுத்தது அரசாங்கத்தில் விஞ்ஞானிகள் பற்றாக்குறையாலா? (நம் தமிழ்நாட்டு மந்திரிசபையில் இல்லாத விஞ்ஞானிகளாக?!) பின் தடைசெய்தது வரவேண்டிய நிதி பற்றாக்குறையாலா? மருந்தே தவறென்றால், அதனால் எத்தனை உயிர்கள் போனது, அதற்கு காரணமானவர்களுக்கு என்ன தண்டனை??

விவசாயத்துக்காக போராடும் விவசாயிகளே மரபணு மாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு என்ன காரணம்? ஒன்று அறியாமை இல்லையென்றால் பேராசை, இல்லையென்றால் அழுத்தம்!

உயிர்காக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருத்துவத்தை வியாபாரமாக்கியது ஏன், அதுவும் அரசியல் மற்றும் வியாபார அழுத்தம்தான்!

காய்களை, கனிகளை, உணவுச்சங்கிலியை, நிலப்பரப்பை, இயற்கைச்சார்ந்த உணவுப்பழக்கத்தை, வீட்டைப்பேணும், உடல்நலத்தை பேணும் நடைமுறையை என எல்லாவற்றையும் நம் இயற்கைச் சரியாகவே வைத்திருந்தது, உலக மயமாக்கலில், இன்னமும் கல்வியை எல்லோருக்கும் பொதுவுடைமைச் சொத்தாக மாற்றாத அரசால், இன்னமும் தங்கள் சக்தியை உணராத மக்களால், எதற்கு ஒன்றுதிரண்டாலும், சாதி என்னும் புள்ளியில் சிதறிவிடும் கூட்டத்தால், அதைச் சரியாக புரிந்துகொண்டு அரசியலாக்கி, மக்களை பிரித்து வைத்து, மருந்துகளிலும், உணவுகளிலும் கலப்படம் செய்ய, மரபணு மாற்றம் செய்ய, குழந்தைகளிடம், ஏழைகளிடம் அதைச் சோதனை
செய்ய, அணுக்கழிவில் நிலப்பரப்பை நாசம் செய்ய, எல்லாவற்றிலும் பணம் செய்ய, கற்று வைத்திருக்கும் ஆட்சி, அதிகாரம், நம்மையும், வருங்காலத்தையும் சிதைத்துக்கொண்டுருக்கிறது! நல்ல மனசாட்சி கொண்ட விஞ்ஞானமும், முன்னோர்கள் கண்ட இயற்கை ஞானமும், பேராசைத்துறந்த மெய்ஞானமும் மட்டுமே வருங்காலத்தில் உயிர்களை காக்கமுடியும்! இதைப்படிக்கும்போது இதெல்லாம் நடக்கற காரியமா என்று தோன்றினால் இன்னமும் தெளிவற்ற துணிவற்ற மக்கள் கூட்டத்தில் நாமும் ஓர் அங்கமே!

உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், அணுவீச்சால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்ட ஜப்பான், உண்மையான மக்கள் சக்தியால் எழுந்துவிட்டது, எனினும் இந்தியா என்னும் மாபெரும் நாட்டில் பணத்துக்கு விலைபோகும் ஆட்சியாளர்களால், அதிகாரிகளால், தெளிவற்ற, துணிவற்ற மக்களால், ஒரு மறைமுக உள்நாட்டுப்போர் மக்களின் உடலில், உணர்வில் நாள்தோறும்
நிகழ்ந்துக்கொண்டேயிருக்கிறது!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...