Thursday 16 November 2017

முரண்களின்_தேசம்!

No automatic alt text available.


இந்தத் தேசம் வியப்பானது
இவர்கள் வலியை உணர்வதற்கும்,
எதையும் செய்வதற்கும்
ஒன்றாகவோ பலநூறாகவோ
மரணங்கள் நிகழவேண்டும்!

மரணங்களின் வாசனை
நீர்த்துப்போகும்போது
இவர்கள் இயல்பு திரும்பவர்
அந்த இயல்பு
அடுத்தமரணம்வரை
நீடித்திருக்கும்
இந்தத் தேசம் வியப்பானது

வெள்ளம் வரும்போது
மழைநீர் வடிகால் பற்றியும்
வறட்சி ஏற்படும்போது
மழைநீர் சேகரிப்பு பற்றியும்
இந்தத் தேசம் பேசும்
மறுபுறம் மரங்களை வெட்டியும்
மழைநீர் வாய்க்கால்களை
ஆக்கிரமித்தும் காட்டுப்பன்றிகள்
போல வாழ்க்கையும் நடத்தும்
ஆமாம்
இந்தத் தேசம் வியப்பானது

பேருந்து ஓட்டையிலோ
நீச்சல் குளத்திலோ
மின்தூக்கியிலோ
"நீட்"டினாலோ
பிள்ளைகள் மரணமடையும்
வேளைகளில்
"ஐயோ" வென்று
கூக்குரலிட்டு
பின் காரணிகளை களையாமல்
அடக்குமுறைக்கு அடிபணிந்து
எந்திர வாழ்க்கையில்
எதையும் கடந்து உழலும்
இந்தத் தேசம் வியப்பானது

அத்தனை அழுக்கான
அரசியல்வாதிகளும்
மரணங்களை எண்ணிக்கையென
கடக்கும் அதிகாரிகளும்
பளீரென்ற வெண்ணிறத்திலும்
பகட்டான உடைகளிலும்
ரத்தம் சுவைக்க தவிக்கும்
கிங்கரர்களைப் போல
பெரிய விலையுயர்ந்த
வாகனங்களில்
பவனி வரும்போது
இந்தச் சின்ன மனிதர்களையெல்லாம்
பெரிய மனிதர்களெனப் போற்றும்
இந்தத் தேசம் வியப்பானது

சாராயத்திற்கு
கொடுக்கும் நீதியை
காவிரித் தண்ணீருக்கு கொடுக்காமல்
கோலா கம்பெனிகளுக்கு
கொடுக்கும் நீதியை
விவசாயிகளுக்கு கொடுக்காமல்
மல்லையாக்களுக்கு கொடுக்கும்
மரியாதையை
மாணவர்களுக்கு கொடுக்காமல்
ஆகம விதிப்படி அர்சசகரென்று
ஒரு சாராருக்கு கொடுக்கும்
தீர்ப்பை
ஏழைகளின் கல்வியுரிமைக்கு
கொடுக்காமல்
பாராபட்ச நீதியரசர்கள் வாழும்
இந்தத் தேசம் வியப்பானது

படித்துப் பட்டம் பெற்று
அரசு வேலையடைந்து
மக்களிடம் கூச்சமேயில்லாமல்
பிச்சையெடுக்கும் வர்க்கமும்
ஓட்டுப்பிச்சையெடுத்து
அமைச்சர் பதவியடைந்து
மக்கள் பணத்தைச் சுரண்டும்
வர்க்கமும்
இவர்களிடம் கையேந்தியும்
இவர்களின் கைகளை நிறைத்தும்
காரியம் சாதித்துக்கொள்ளும்
மக்கள் வர்க்கமும்
நீதியையும் நியாயத்தையும்
இவர்களிடமே எதிர்ப்பார்த்து நிற்கும்
அட
இந்தத் தேசம் வியப்பானது

வியப்பான இந்தத் தேசத்தில்
மழையும் வெய்யிலும்
காலநிலையில் குழம்பி
புயலாலும் பூகம்பத்தாலும்
கறைகளை அகற்ற
முயற்சித்துக்கொண்டேயிருக்கிறது
மனிதர்கள் தம் நம்பிக்கையை
மீட்டெடுக்க வேண்டிய
அவசியத்தை நினைவுறுத்தியபடி!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!