Thursday 16 November 2017

தேசப்பற்று_கிரிக்கெட்டும்_மத_ஊறுகாயும்

ஒரு இரயில் பயணத்தில், பல்வேறு தேசங்களில் வியாபாரம் செய்யும் ஒருவரும், வேறு இருவரும் மரணத்தண்டனைக் குறித்து காரசாரமாக விவாதித்துக்கொண்டார்கள்! அரபு நாடுகளைப்போன்று உடனடியாக பொதுவெளியில் வைத்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று ஒருவர் சொல்ல, அப்படி நிறைவேற்றியும் குற்றங்கள் தொடர்கதைதான் என்று வியாபாரி சொல்ல, குற்றங்களுக்கு உடனடி தண்டனை எனும்போது, அந்தக்குற்றங்கள் குறையத்தானே செய்கிறது என்று இன்னொருவர் சொல்ல, அரபு நாடுகளில் ஆரம்பித்து, சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில், அரசு உத்தரவை உடனடியாக மதிக்கும் நிலையை, நடைமுறைச்சட்டங்களை அலசி, இறுதியில் ஜப்பானியர்களைப் போல சுய ஒழுக்கத்துடனும், சகமனிதர்களின் மீது காட்டும் மரியாதையுடனும், அபார நாட்டுப்பற்றுடன் இருப்பதே நல்லது என்று முடிந்தது!

என்னைப் பொறுத்தவரையில் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், பல்வேறு மொழிகளும், கலாச்சாரமும் நிறைந்த நாட்டில், வேற்றுமையிலும் ஒற்றுமை பாராட்டும் மக்களே போற்றுதலுக்குரியவர்கள்! 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் வன்முறையை நம்பாமல், நீதிமன்றத்தை நாடி வாழ்க்கை முழுதும் வழக்காடினாலும், சில நூறு ஊழல்வாதிகளை, பல ஆயிரம் ரவுடிகளை ஒன்றும் செய்யமுடியாமல் இருப்பதுதான் இங்கே கலையப்பட வேண்டிய முதல் விஷயம்! மன்னர்கள்
கையில் இருந்து ஆட்சியைப்பிடுங்கி, சில ஊழல்வாதிகளை மன்னராக்கி வைத்திருப்பதுதான் இந்த மண்ணின் சாதனை!

400 ஆண்டுகால ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்திலும், அதற்கு பிறகான ஆங்கிலேயே ஆட்சியிலும், பாலஸ்தீனத்தின் பகுதியைப்பிடுங்கி யூதர்களுக்குத்தந்து, 1947 ல் வரலாற்றுப்பிழையை செய்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், 1948 ல் கிட்டத்தட்ட 7 லட்சம் பாலஸ்தீனியர்கள் நாடிழந்தனர், வீடிழந்தனர்! அன்று தொடங்கி இன்றுவரை, யூதர்களுக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் தினம் தினம் போர்க்களமே! கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் தருகிறேன் என்று, இந்து முஸ்லீம் என்று பந்தாடி, 1947 ல் இருந்து 1948 வரை லட்சக்கணக்கான மக்களை, பிரிந்த இருநாடுகளின் எல்லைகளை நோக்கியும் துரத்தியதில், சில லட்சம் மக்கள் அகதிகளானர்கள், சில லட்சம் பேர் மாண்டுபோனார்கள்! பங்காளதேஷ் உருவாக்கி, காஷ்மீர் பதட்டம் வரை வரலாற்றுப்பிழைகள் ஏராளம்!

இத்தனை களேபரத்திலும், இந்தியர்கள் கிரிக்கெட் பார்த்து தேசப்பற்று வளர்ப்பதுதான் வேடிக்கை! பொது காரியங்களுக்கு வராமல் நடிகையை காண நகரமே நடுங்கும் வண்ணம் கூடுவதுதான் இவர்களின் அதிகப்பட்ச பொதுச்சேவை! மக்களின் அடிப்படை மனநிலையை, தேசப்பற்றை, கேள்விகள் கேட்கும் திறனை, துணிச்சலை சிறந்த கல்வியும் கலாச்சாரமும் கொண்டுவந்துவிடும்தான், ஆனால் அது நடந்துவிட்டால் ஊழல் அரசியல் பிசுபிசுத்துப் போய்விடுமே!?

இந்தியச் சுதந்திர வரலாறு தெரியாமல் ஆங்கிலேயன் பரவாயில்லை என்பதும், சமீபத்திய பெரும்பான்மையால் இந்துத்வா கொள்கையெடுக்கும் ஒரு அரசினால் இந்துக்கள் மோசம், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்கள் பரவாயில்லை என்பதும், அட இந்த முஸ்லீம்களில் தான் கடத்தல்காரர்களும் தீவிரவாதிகளாலும் அதிகம் என்பதும், கிறிஸ்தவ மிஷினரிகளால் அந்த மதமே சிறந்தது என்றும், அவ்வப்போது குழம்பி, ஒருவரையொருவர் சாடிக்கொள்ளும், எளிதில் சாதிமத உணர்வில் தூண்டப்பட்டு அடித்துக்கொள்ளும் இந்த மக்கள்தான் அரசியல்வாதிகளின் பலம்!
தீவிரவாதத்தில், வன்முறையில் எல்லா மதங்களுமே குளிர்காய்கிறது, ரத்தம் தோய்ந்த வரலாறு எல்லா மதத்துக்கும் உண்டு! அரசியல்வாதிகளுக்கு மதமோ மனிதமோ கிடையாது, பணமே மதம், பதவியே சாதி, புகழே போதை, மக்களே பலியாடுகள்!

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் நாட்டுப்பற்றை எப்படி வளர்க்க வேண்டும் ?

சிறந்த கல்வியால்தான், அது எல்லோருக்கும் கிடைத்துவிடக்கூடாது, கிடைத்துவிட்டால் கலவரம் செய்ய, கல்லடிக்க, பெண்களை கடத்த, சாராயம் காய்ச்ச சூத்திரர்கள் கிடைக்க மாட்டார்கள், மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள், 60 ஆண்டுகள் கடந்த இந்தியாவில் இன்னும் 60 ஆண்டு காலம் கடந்தாலும் இதெல்லாம் மாறாது மக்கள் கேள்விகள் கேட்டு கல்விக்காக குரல் எழுப்பும்வரை! மாற்றங்களை போராடித்தான் பெற வேண்டும், மீண்டுமொரு சுதந்திரம் இந்தியாவுக்கு வேண்டும்! குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு தேசம் வேண்டும்!

அது கிடைக்கும்வரை நாம் என்ன செய்ய வேண்டும்? என் பன்னிரெண்டு வயது மகனிடமும், எட்டுவயது மகளிடமும் இதைத்தான் சொல்கிறேன், வரலாற்றை தெரிந்துக்கொள், (இல்லையென்றால் மோடியால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம்கிடைத்தது என்று வருங்காலம் சொல்லக்கூடும்), ரௌத்திரம் பழகு, ஆரோக்கியம் பேணு, தெளியப்படி, அறிவு வளர கேள்விகள் கேள், பிற உயிர்களை நேசியென்று எல்லாம் சொல்லி, இறுதியில் இதையும் சொல்கிறேன், "ஸ்கூலுல டாய்லெட்டுக்கு தனியா போகாதே, தனியா இருக்காதே, வெளியே விளையாடப்போகும்போது யார் வீட்டுக்கும் தனியா போகாதே" மற்றபடி மனதுக்குள்,
"சிறுமியை எரித்தவனை நடுரோட்டில் எரித்து, சிறுவனை கொன்றவனை நடுரோட்டில் வெட்டிக்கொல்லும் சட்டம் வரும்வரை" என்று தொடர்புள்ளி வைக்கிறேன்!

முதலில் அரபுத்தண்டனைகள் தரட்டும், பிற்காலத்தில் இது ஜப்பானிய தேசமாகட்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!