Thursday, 16 November 2017

புதிய_தெய்வங்கள்

Image may contain: one or more people

குடித்துவிட்டு
அம்மாவின் மண்டையுடைத்தவன்
மனைவியின் உழைப்பை
திருடித்தின்றவன்
பிள்ளையின் கல்விக்கனவை
கலைத்து
சோம்பலில் சுகம் கண்டவன்
பெண்களென்றாலே
பாலியல் சுகத்துக்கு
மட்டுமேயென்றவன்
பெண் கொலைகள் நடந்தாலும்
குற்றாவாளிகளைத்
தப்பவிடும் அதிகாரம் படைத்தவன்
மரங்களைவெட்டி
வனம் அழித்து
நதிநீருக்காக கண்ணீர் விட்டவன்
சாதிச்சொல்லி
காமம்தீர்க்க
எளியவர்களை கொன்றுபுசித்தவன்
இச்சை தீர்க்காத பெண்ணை
பரத்தையென்றுப் பழிக்கூறுபவன்
தளிர்குழந்தைகளின் யோனிகளில்
மோகவெறி தீர்த்துக்கொள்பவன்
சேற்றில் உழலும்
பன்றிகளைப் போல்
ஆடை அகன்று
சாலையில் போதையில் கிடப்பவன்
எந்த விதிகளையும் மதிக்காமல்
தன் வாகனத்தின் வேகத்தில்
உயிர்களைப் பறிப்பவன்
காசுப்பாக்கிக்காக
தளிர்களின் மூச்சை நிறுத்துபவன்
சாமியார் வேடம்பூண்டு
காமவேட்டையில் ஈடுபடுபவன்
பதவிக்காகப் பல்லிளித்து
முதுகு வளைத்து
கொலைகள் செய்து
பச்சோந்தியாய் வாழ்பவன்
பணியிடத்தில்
பெண்களைத் துன்புறுத்துபவன்
இன்னும் எத்தனையோ
செய்பவனென
ஆணென்று ஆண்கள் பிறழும்
தேசத்தில்
எப்போதும் பெண்களுக்கே
அறிவுரைகளும்
நல்லொழுக்க கதைகளும்!

ஆண்பிள்ளைகளின் வளர்ப்பில்
எங்கோ பிறழ்ந்துவிடும்
பெற்றவர்கள்,
முத்தாய்ப்பாக
"பெண்ணே தெய்வம்"
என்று சொல்லிவிடுகிறார்கள்,
பெண்குலமும்
மன்னித்துத்தொலைகிறது
புதிய தெய்வங்கள் உருவாகின்றன!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!