சுருக்கமாக;
1. குழந்தைகளிடம் (பள்ளி - கல்லூரி எந்த வயது என்றாலும்) தினமும்
பேசுங்கள், உங்களுக்கு அன்றைய தினம் எப்படிக் கழிந்தது, என்ன நடந்தது
என்பதை சுருக்கமாக பகிர்ந்து அவர்களை அதிகம் பேச வையுங்கள்!
2.
குற்றமோ குறையோ தெரிந்தால், மதிப்பெண் குறைவாக வாங்கினால், சக
குழந்தைகளிடம் சண்டையிட்டால், “நாயே பேயே, சனியனே, பக்கத்துவீட்டுப் பையனை
பாரு, இது அப்பனை போலவே எதுக்கும் உதவாது என்றோ, அம்மாவை போலவே சோம்பேறி”
என்றோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஓப்பிட்டோ திட்டவோ, மட்டம் தட்டவோ
செய்யாதீர்கள்!
3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமையுண்டு, அதை
மேம்படுத்த உதவுங்கள், உங்கள் குழந்தை என்றாலும் அது இன்னுமொரு உயிரே தவிர,
மருத்துவராகவோ, கலெக்டராகவோ உங்களுடைய தனிப்பட்ட நிறைவேறாத ஆசைகளையோ
அல்லது குப்பைகளையோ சுமக்கும் எந்திரங்கள் அல்ல அவர்கள்
4. குழந்தை
பேசினாலும் யார் பேசினாலும் கைபேசியை தள்ளி வைத்துவிட்டு கண்கள் பார்த்து
பேசுங்கள், பேசுபவருக்கு மரியாதை தாருங்கள், பிள்ளைகளுக்கும்
கற்றுத்தாருங்கள்!
5. ஆட்டோ ஓட்டுநர், வேன் ஓட்டுநனர்,
பணியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராய் இருந்தாலும், “அந்த மாமா ரொம்ப
நல்லவரு” என்று குழந்தைகள் எதிரே யாருக்கும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ
சான்றிதழ் தராதீர்கள், ஒருவேளை ஏதோ ஒரு கேடுகெட்டவன் தவறாய் நடக்க, தான்
சொன்னால் பெற்றவர் நம்ப மாட்டார்கள் என்றே குழந்தை நம்பும், கெட்டவர்கள்
என்று எல்லோரையும் பறைசாற்றும் போது, எல்லோரையும் கண்டு தேவையில்லாமல்
மிரளும்! நல்லவர்களோ கெட்டவர்களோ, பெற்றவர்
இல்லாமல், பெண் உறவு
இல்லாமல் யாரிடமும் தனித்திருப்பது தவறு என்றும், தலையைத் தவிர, கைகளைத்
தவிர எங்கும் யாரும் தொடக்கூடாது என்று சொல்லி வையுங்கள்!
6. எந்த
வாகனத்திலும் யாரையும் நம்பி பிள்ளைகளை தனியே அனுப்பாதீர்கள், சில
விடலைப்பையன்கள் சிறு குழந்தைகளை பைக்கின் முன்னே உட்கார வைத்து விர்ரென்று
சாலையில் பறப்பதும் நிகழ்கிறது, சில ஆட்டோ ஓட்டுநனர்கள் பெண்
குழந்தைகளிடம் சில்மிஷம் செய்வதும் நிகழ்கிறது!
7. உங்கள் மதமோ,
சாதியோ, பெண்களை வீட்டில் பூட்டி வைக்குமென்றால், உங்களை திருத்துவதை
காலம் செய்யட்டும்; ஆனால் உங்கள் பிள்ளைகளை தகப்பனாய், சகோதரனாய் நீங்கள்
அழைத்துச்செல்லுங்கள், அதையும் ஒரு “டிரைவர் மாமாவிடம் விடாதீர்கள்!”
8. ஒவ்வொரு குழந்தைக்கும் “இரும்புச்சத்து” அவசியம், பல்வேறு சரிவிகித
உணவுகள அவசியம், தினம் தினம் விதவிதமாய் “சீரியல்கள்” பார்த்து கண்ணீர்
விடுவதற்கு பதில் விதவிதமாய் சமைத்துக்கொடுங்கள்! சமைக்கத் தெரியவில்லை
என்றால் கையில் வைத்திருக்கும் கைபேசியில் உலகமே வரும், சமையல் குறிப்பு
வராதா?
9. சாலையில் செல்லும்போது, பிள்ளைகளை உங்களது இடதுபக்கமோ
அல்லது வாகனம் வராத பக்கமோ கைப்பிடித்து அழைத்துச்செல்லுங்கள். வாகனத்தில்
சென்றால் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள்!
10.
பொருட்காட்சி, கடற்கரை, கடைவீதி, திருமண விழாக்கள் என்று எங்கே சென்றாலும்
(18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் தவிர்த்து) பிள்ளைகளை கும்பலோடு
விளையாடட்டும் என்று விட்டுவிட்டு நீங்கள் ஊர்கதைகளில், வேடிக்கைகளில்
திளைக்காதீர்கள்! பொது இடங்களில் கழிவறைக்கும் தனியே அனுப்பாதீர்கள்!
1 1. பள்ளிவிட்டு வரும்போது சரியான நேரத்தில் வருகிறார்களா என்று
பாருங்கள், உங்களுடைய கேள்விகளும், கண்காணிப்பும் பிள்ளைகளுக்கு
பாதுகாப்பையும் அரவணைப்பையும் தர வேண்டுமே தவிர, தேவையில்லாத பயத்தையும்
உங்கள் மீதான சலிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது!
12.
“ஆண்தான் உயர்ந்தவனென்றும் பெண்பிள்ளை என்றால் அடங்கிப்போக வேண்டும்”
என்றும் இருபாலரிடமும் சொல்லி வளர்ப்பதை நிறுத்தி, “மனிதத்தன்மை பற்றியும்,
அன்பு, அறன், ஒழுக்கம், சமையல், சுத்தம், வீரம், நேர்மை, விவேகம்”
இவையெல்லாம் இருவருக்கும் பொது என்றும் சொல்லிலும் செயலிலும்
நிலைப்படுத்துங்கள்!
13. பிள்ளைகள் முன்பு பொய் சொல்லி, பிள்ளைகள்
முன்பு சண்டையிட்டு, பிள்ளைகள் முன் மரியாதையில்லாத வார்த்தைகளை பேசி,
பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதாக கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள், நாம்
தருவதையே உலகம் நமக்கு திருப்பித்தரும், நாம் செய்வதையே பிள்ளைகளும்
கற்கிறார்கள், “பூ மலர பூவின் விதையை விதைக்க வேண்டும்”
14.
“மன்னிப்பும், நன்றியும்” நல்ல வார்த்தைகளே, “தமிழில் எனக்கு பிடிக்காத
வார்த்தை மன்னிப்பு” என்று அதை தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக
உருவகப்படுத்தாமல், தவறு செய்வது மனித இயல்பு, அதை திருத்திக்கொள்வதும்,
மன்னிப்பும், நன்றியும் மனதிலிருந்து வரும் வார்த்தைகளாக இருக்க வேண்டும்
என்று சொல்லி வளருங்கள்!
15. லூசுத்தனமான / சைக்கோத்தனமான
ஹீரோக்களின் படங்களை பிள்ளைகளுடன் பார்ப்பதை தவிருங்கள், அவர்களையும்
பார்க்க அனுமதிக்காதீர்கள்! பேய் படங்களை, ஆக்ஷன் படங்களை, அறிவியல்
படங்களை பார்க்கும் போது, அது வெறும் படம், பாடமல்ல என்று
எடுத்துச்சொல்லுங்கள்! ஆர்வமும் அதற்குரிய விஷய ஞானமும் இருந்தால், அதன்
பின்னே உள்ள அறிவியலை, உளவியலை விளக்குங்கள்!
16. வளர்ந்த
பிள்ளைகளிடம் “நோ” என்பது கெட்ட வார்த்தையல்ல, “நோ” விற்கு மாற்றாக ஒரு
“எஸ்” வேறு இடத்திலோ வேறு வாய்ப்பாகவோ, அது கல்வி என்றாலும் காதல்
என்றாலும் இருக்கும் என்று தெளிவுப்படுத்துங்கள்!
17. இவ்வளவும்
படித்து, பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சுமையென்று கருதினால் இணையுடன்
காமத்தை வெறும் வடிகாலாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு
நிறுத்திவிடுங்கள், உயிரை கொண்டு வந்து வதைக்காதீர்கள்!
18. எத்தனை
செய்தும், பிள்ளைகளுக்கு வன்கொடுமை நிகழ்ந்துவிட்டால், அதை “விபத்தென்று”
கருதி, “விபத்தென்று” அவர்களுக்கு தெளிவுப்படுத்தி, இன்னமும்
“தன்னம்பிக்கையுடன்” வாழ்க்கையை எதிர்நோக்க ஒரு நல்ல தோழமையாய்
வழிகாட்டுங்கள்!
#குழந்தைகளுக்காக