Saturday, 20 April 2019

ஆண்ஈகோ

நேற்றிரவு சிக்னலில் நின்றிருக்க என் இடதுபுறம் சரியாய் முகம் நோக்குவது போல் ஒரு கார் வந்து நின்றது, நான் வலதுபுறம் திரும்ப அந்தக் காரும் அப்படியே, இருவரும் இரண்டு லேன்களில் பயணிக்க கொஞ்சம் வேகமாய் செல்ல, அங்கே ஆண் ஈகோ பிய்த்துக்கொண்டது, அதுவும் அந்தக் காரில் “எல் போர்ட்”, “ஏன்டா இப்படி?” என்று நினைத்துக்கொண்டு என் லேனில் சென்று கொண்டிருக்க, சர்ரென்று வேகத்தை உயர்த்துவதும், இடதுபுறம் இருந்து வலதுபுறம் வருவதும், நான் இடதுபுறம் செல்ல, வலதிருந்து இடதிற்கு வருவதுமாக வேடிக்கைக் காட்டுவதுமாக வந்தது அந்த வண்டி, தன் வண்டியில் எல் போர்ட் போட்டு ஓட்டினாலும், பிற வாகனத்தில் பெண்ணை பார்த்துவிட்டால் வேகம் எடுத்துப் போகும்
அந்த ஆண் ஈகோவை அலட்சியப்படுத்தி கடந்துவிடலாம், (பெண்ணின் உடைகளை பார்த்தே கிளர்ச்சியடையும் ஒரு வகை ஆண் ஜந்துவின் வகையறா இது என்று கடந்துவிடுவேன்) என்று என் வழியில் செல்ல, குறுக்கும் நெடுக்குமாக வேடிக்கை காட்டியதில், பியட்டை புயலாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தது (சிங்கத்தை தட்டி எழுப்பிடுச்சு பயபுள்ள) அது அந்த ஹோண்டா ப்ரையோவை சாலையில் வெண்ணையாக வழுக்கிக்கொண்டு கட் செய்து மின்னலாக விரைய, கொஞ்சம் முன்னே அந்தக் காரை மறித்து, கார் கண்ணாடியை இறக்கி, “தம்பி (அங்கே தாத்தாவே இருந்தாலும் தம்பிதான் 😉) ரோட்டை பார்த்து ஓட்டு, மத்த வண்டியில உள்ள பொண்ணை பார்த்து ஓட்டாதே, ஒழுங்கா வீடு போய் சேர மாட்டே) என்று சொல்ல நினைத்து, “ச்சீ ஒழுங்கா போ” என்று தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தேன், பின்னே அந்தக் கார் வரவில்லை, தன் மனதை ஆற்றுப்படுத்திக்கொண்டு அடுத்தத் தெருவில் ரேஸ் விடுவானாக்கும் என்று நினைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்!

இந்த ஆண் ஈகோவை பற்றி பலமுறை யோசித்ததுண்டு, பள்ளியில் படிக்கும் போது, என் நண்பர்களுக்கு சக மாணவிகளை விட அதிக மார்க் வாங்க வேண்டும் என்ற ஈகோ வந்ததில்லை, வீட்டிலும் வெளியிலும் பெண் உழைக்க குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறோமோ என்று ஆண் ஈகோ நினைப்பதில்லை, திருமணம் செய்துகொள்ளும் போது, பெண்ணின் சொத்தை கணக்கிட்டு தன்னை விற்க வரதட்சணை கேட்கிறோமோ என்று ஆண் ஈகோவோ வெட்கமோ தலைதூக்குவதில்லை!

ஆண் ஈகோ, உண்மையாய் நேசிக்கும் பெண்ணை கைவிடும்போது அவள் தியாகியாய் விலக வேண்டும் என்று நினைப்பதும், அதுவே அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் தியாகியாய் மாற ஆண் என்ற தன்மை இடம் கொடுக்காமல் இருப்பதுமேயான நிலையை மட்டுமே உறுதிப்படுத்துகிறது! பெண் “நோ” என்று சொல்லிவிட்டால், பெண் சாலையில் முந்திச்சென்றால் மட்டுமே ஆண் ஈகோ சிலிர்த்தெழுகிறது!

உண்மையில் ஆண் வளர்ப்பு பரிதாபத்துக்குரியது, தோல்வியை ஜீரணிக்க முடிவதில்லை, மனக்கட்டுப்பாடு இல்லாமல் சிகரெட்டிலும், சாராயத்திலும் எளிதில் சிக்கிக்கொள்கிறது, பெண் ஆணை நேசிப்பதுபோல் ஆனால் பெண்ணை நேசிக்க முடிவதில்லை, பெரும்பாலும் ஆணின் நேசம் காமத்திற்குள் அடங்கிவிடுகிறது, பெண்ணின் மனம் தொட்டு, பெண்ணை சக மனுஷியாக பாவித்து, அவள் உணர்வுகளை மதித்து, நேசித்துக்கொண்டாடி, திறமைகளை மதித்து, மரியாதையுடன் நடத்த நடந்துக்கொள்ள சில ஆண்களால் மட்டுமே முடிகிறது, பெண் என்றால் அழகுப்பதுமை, பெண் என்றால் வீட்டு வேலைச்செய்ய பிறந்தவள், பெண் என்றால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியவள், பெண் என்றால் ஆடைகளில் அடக்கமாக இருக்கவேண்டியவள், பெண் என்றால் ஆணுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியவள் என்று இத்தனை பாடங்களை எடுக்கும் பெண்சமூகம், வளர்க்கும் தம் ஆண் மகன்களை நல்ல மனிதர்களாக, மனநலம் மிக்கவர்களாக வளர்க்கவேண்டியது காலத்தின் கட்டாயம், இல்லையென்றால் குழந்தைகள், மிருகங்கள் என்று புசிக்கும் ஆண்கள், வருங்காலத்தில் மனநலம் கெட்டு சகோதரியை, தாயைக்கூட தாரமாக்கிக்கொள்வார்கள்!

பெண் குழந்தையை கொண்டாடுவது போல், பெண் குழந்தைகளை வேலைகள் செய்ய பழக்குவது போல், பெண்ணை பொறுமையாய் இருக்கச்சொல்வது போல் ஆண் குழந்தைகளையும் நேசம் கொட்டி, ஒழுக்கம் போதித்து, தானே ஒரு எடுத்துகாட்டாக இருந்து வளர்க்க வேண்டும் பெற்றோர், அன்பும் அரவணைப்பும் ஆணுக்கும் வேண்டும் இந்த வெட்டி ஈகோ அற்றுப்போக!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...