Saturday 20 April 2019

பெண்ணியம் தாக்கும் வசவுகள்

எண்ணிலடங்கா வசவுச்சொற்களை, அதிலும் அவையனைத்தும் பெண்ணின் உறுப்புச்சார்ந்தே இருந்ததை எழுத்துவடிவில் இந்த முகப்புத்தகத்திலும், பேச்சு வடிவில் குடிசைகள் நிறைந்தப்பகுதியிலும், பயணிக்கும் வேளைகளில் நன்றாக படித்தவர்கள் பேசவும் தெரிந்துக்கொண்டிருக்கிறேன்!

கட்சி வேறுபாடு இல்லாமல், எந்த நடிகனின் ரசிகன் என்ற வேறுபாடில்லாமல், சாதி, மதம் வேறுபாடில்லாமலும், எந்தப்பிரச்சனை என்றாலும் ஒருவரை இகழ மற்றவர் அவரின் குடும்ப பெண்களையே சாடுகிறார், பொதுவெளியில் அது பெண்ணாய் இருந்துவிட்டால் இன்னமும் மோசம், பிரச்சனை எதுவாய் இருந்தாலும் பேச்சு பெண்ணுறுப்பில் வந்து நிற்கிறது, பெண்ணுடல் மீதான அவர்களின் காமத்தின் வக்கிரத்திலேயே அத்தனை வசவுச்சொற்களும் கட்டமைக்கப்படுகின்றன, கோவில்களில் பெண் தெய்வத்தை வழிபட்டு, வீட்டில், வெளியில், பெண்ணுருவில் அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள், ஆசிரியை, தொழிலாளி, முதலாளி என்று திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள் நிரம்பியிருக்க, பெண் உறுப்பின் வழியே உதிரம் சிந்த பிறப்பெடுத்து, பெண்ணின் மூலையில் பாலருந்தி உயிர் வளர்த்து சட்டென்று பொதுவெளியில் அத்தனை பெண்பால் ஒட்டிய உறுப்பு வார்த்தைகளை வசவுச்சொல்லாக மாற்றிய இந்த ஆண்சமூகம்தான் எத்தனை நன்றிகெட்டது என்றே தோன்றுகிறது அதுபோன்ற வார்த்தைகளை கேட்க நேரும்போதோ அல்லது படிக்க நேரும்போதோ!

சக ஆணுடனான ஒரு சண்டையில் கூட பெண்ணுறுப்பு வார்த்தைகளின் பின்னே வாள் வீசும் கோழைகளை ஆண் என்றே சொல்லுவது வேடிக்கைதான், ஆணுறுப்பு ஒன்று இல்லாவிட்டால் இத்தகையோர் ஆணே இல்லை, வெறும் ஆணவத்தின் வழி வந்த எச்சம் மட்டுமே! சக பெண்ணுடனான போரிலும் கூட அவள் எத்தனைபேருடன் கூடியவள் என்று தரம் தாழ்த்திப்பேசுபவர்களின் பெற்றவளை எண்ணி கண்ணீர் வடிக்க வேண்டும், கிட்டதட்ட 80 சதவீதம் ஆண்களின் நடவடிக்கை வீரம் எல்லாம் பெண்ணைச் சுற்றியே வருகிறது, பிறகு அவர்கள் தங்களை தங்கள் உறுப்பு வழி மட்டுமே ஆணென்று நிரூபித்துக்கொள்கிறார்கள், ஒருபோதும் தம் கண்ணியத்தின் வழி அல்ல!

சாலையில் சிக்னல்களை மதிக்காமல், உயிர்களை மதிக்காமல் சீறிப்பாய்கிறார்கள், பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு ஆபத்தென்றால் நவத்தூவரங்களையும் பொத்திக்கொண்டு செல்போன் காமிராவை திறந்து வைத்துக்கொள்கிறார்கள், சட்டத்தின் வழி, மனசாட்சியின் வழி, நீதியின் வழி சீறிப்பாயாத இவர்கள் ஆண்மையெல்லாம், கட்சிச்சண்டைக்கும், சொத்துச்சண்டைக்கும், வேறு எதற்கும் வார்த்தைப் பிரயோகித்தில் பெண்ணுறுப்பின் வழி அடைக்கலமாகிறது!

இவர்களை நம்பி இந்தியா இருக்கிறது என்று சொல்வதால் தான் இந்தியா பெண் பாதுகாப்பில் கோட்டைவிட்ட நாடுகளில் முதலிடத்திலும், உலகிலேயே மோசமான ஆண்களின் பட்டியலில் இந்திய ஆண்களை முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது!

பொதுவாய் ஆண்கள் இதுபோன்ற வார்த்தைகளை பிரயோகிக்க, சில காரணங்கள் உண்டு, அது;

1. வளர்ப்புமுறை, வீட்டில் பொதுவெளியில் இவர்கள் வீட்டின் ஆண்கள் பெண்களை இழிவுப்படுத்தியே வந்திருப்பார்கள், அதன் தாக்கம்
2. கல்வியறிவின்மை, அல்லது மெத்தபடித்தும் வெற்று ஏட்டுக் கல்வியை கற்றது, உலக அறிவு இல்லாதது, பெண்களைப்பற்றி தாம் கேட்ட அறிந்த கதைகளை வைத்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் திணித்துக்கொண்டு, பெண்ணை புறம் சொல்வது

3. திறமையின்மை; ஒரு பொதுவெளியில் ஒருவனோ ஒருத்தியோ தெளிந்த அறிவுடன் ஆதாரத்துடன் வாதிடுகையில், போதிய ஆதரமோ, அறிவோ, பதில் சொல்லும் சாமர்த்தியமோ இல்லாதபோது தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், சட்டென்று வசவு சொற்களை பிரயோகித்து, செய்தியை மடைமாற்றிவிடுவது! இந்த வகை நாட்டில் மிக அதிகம்

4. பாலியல் அறிவின்மை; பாலியல் தெளிவில்லாதவர்கள், தன்னுடைய துணையுடன் திருப்தியில்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லது தகுந்த துணையற்று வாழ்பவர்கள், எப்போதும் போர்னோ செய்திகளை படித்தும் பார்த்தும் வாழ்க்கையில் எப்போதும் எல்லோரும் 24 மணிநேரமும் செக்ஸில் மூழ்கிக்கிடக்க தமக்கு மட்டும் எதுவும் கிட்டவில்லை என்ற ஒரு மாயையில் போதையில் உழல்பவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள், குழந்தைகளிடம் கூட வக்கிரம் தணித்துக்கொள்ள முயல்பவர்கள் இவர்கள்தான்

5. பெண்ணுடல்/ உணர்வு பற்றிய தெளிவின்மை; திரையில் பிம்பங்களை பார்த்துவிட்டு பெண்ணுடலை வெறும் காமத்தின் வடிகாலாக மட்டுமே பார்ப்பவர்கள், பெண் என்றால் சமைப்பதற்கும், படுப்பதற்கும் என்ற ஆணாதிக்க சிந்தனையில் ஊறியவர்கள், இதுவும் முதல் கருத்தில் சொன்னது போல வளர்ப்பு வழி சூழல் வழி வருவது!

6. தோல்வியாளார்கள்/எதிர்மறை சிந்தனையாளர்கள்; திரையில் பெண் நோ சொல்லிவிட்டால் அது ஆண்மைக்கு விடப்பட்ட சவால் என்று தவறான சிந்தனையில் உழல்பவர்கள், எப்போதும் ஒருவித பதட்டத்துடன் காணப்படுவார்கள், எப்போதும் தன் துணையை பற்றிய சந்தேகம் இவர்களுக்கு இருத்துக்கொண்டே இருக்கும், தம் எல்லா தோல்விகளுக்கும்
காரணம் ஏதோ ஒரு பெண் என்றே பழி சுமத்துவார்கள், வெற்றியடைந்தால் தம் திறமை என்றும் தோல்வியடைந்தால் அதற்கு தம் தாய், மனைவி, காதலி, சகோதரி, ஆசிரியை, என்று யாரேனும் எளிதில் இவர்களுக்கு இலக்காவர்கள்!

7. அடிமைகள்; இது கடைசி பிரிவு, வீட்டில் எலியாக, பெற்றவளின் முந்தானையை கொஞ்ச காலம் பற்றியிருந்துவிட்டு, பின் அம்மாவை விட்டு பிரிந்து, பெரும்பாலும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, மனைவியின் முந்தானைக்குள் மூழ்கி, காமத்துக்காக அடிமையாய் மாறிப்போன வர்க்கம், பொதுவெளியில் வந்து தம் வக்கிரத்தை, ஆண் என்ற ஆதிக்கத்தை பிறரின் மீது சிங்கமென நீருபிக்க தேவையற்று கர்ஜித்துக்கொண்டிருக்கும், வீட்டில் சோறு கிடைக்காத நாளிலும் கூட வெளியில் சாக்கடை வார்த்தைகளைக்கொட்டி வீட்டில் தொலைந்துபோன ஆண்மையை வெளியே மீட்டெடுக்க முயற்சிக்கும்!

இவைகளில் எல்லாவற்றையுமோ அல்லது ஒரு சில வகைகளையோ நாம் அன்றாடம் கடந்திருக்கலாம், நாம் செய்ய வேண்டியது இரண்டுதான், ஒன்று பதிலே சொல்லாமல் இந்த மனநோயாளிகளை புறம்தள்ளுவது, இரண்டு நம் வீட்டில், நட்பில், உறவில் இதுபோன்ற மனநோயாளிகள் உருவாகலாம் தடுத்து நிறுத்துவது, ஆண் குழந்தைகளுக்கும் அன்பும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் தேவை! இல்லையென்றால் மிக மிக மோசமான ஆண்களாக இந்திய ஆண்களும், முற்றிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நிரந்தர தேசமாகவும் இந்தியா மாறிவிடும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!