Saturday, 20 April 2019

பாவக்குழிகளாகும்_சாலைகள்

#பாவக்குழிகளாகும்_சாலைகள்
~<<<<<<
ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு விபத்துகளையாவது காணவும் கடக்கவும் நேரிடுகிறது!

இப்போதெல்லாம் சென்னையில் பெரும்பாலான இளைஞர்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பதில் மிகுந்த நம்பிக்கையும், போக்குவரத்து விதிகளின் மீது மிகுந்த அலட்சியமும் பெருகி வருகிறது! ஒரு சின்ன உதாரணம், சோழிங்கநல்லூரில் முகமது சதக் கல்லூரியின் சாலையில் பேருந்து போகும் ஒரு பக்கத்தின் பாதியை கடைகளும், வாகனங்களும் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றன, அந்தச் சாலையின் எதிர்புறத்தில்தான் போக்குவரத்து காவலர்கள் நிற்கிறார்கள், காவல் நிலையமும் இருக்கிறது. படிக்கும் மாணவர்கள், எல்காட் சிட்டியில் உள்ள அலுவலகங்களில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள், பெண்கள் கொஞ்சம் முன்னே சென்று ஒரு யு டர்ன் செய்ய சோம்பல் பட்டு நேர் எதிரே வருவதும், தினமும் விதிகளை மீறி போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்துவதும் விபத்தில் சிக்கி சிதறியதும் சர்வ சாதாரணமாய் நிகழ்கிறது!

ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில், நந்தம்பாக்கம் செல்லும் சாலையில் என்று பெரும்பாலும் இந்த எல்லா நெடுஞ்சாலைகளிலும், குடியிருப்புத்தெருக்களிலும் சாலை விதிகளை மதிப்பது குறைந்துகொண்டே வருகிறது! போக்குவரத்து துறை தெரிந்தே வேடிக்கை பார்ப்பதுதான் கொடுமையின் உச்சம்!
தலைக்கவசம் இல்லையென்றால் அபராதம்,லைசன்ஸ் இல்லாமல் வாகனம்
ஓட்டக்கூடாது, 18 க்கு கீழ் இருப்பவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விதிகள் எல்லாம் கண்துடைப்பே!

நிற்கும் ஒன்றிரண்டு காவலர்கள் எத்தனை வாகனங்களை நிறுத்தமுடியும், வெறும் தீர்ப்புகளை எழுதிவிட்டு நீதிபதிகளும், சட்டத்தை இயற்றிவிட்டு ஆட்சியாளர்களும், வாகனங்களை வாங்கிக்கொடுத்துவிட்டு பெற்றோர்களும் வேடிக்கை பார்க்கின்றனர், அதை செயல்படுத்த தேவையான கட்டமைப்பை சாலைகளில் அரசு உருவாக்கவேண்டும், அதுவும் வெறும் கேலிக்கூத்தாக இருக்கக்கூடாது, உதாரணத்திற்கு எல்லா சாலைகளிலும் இடதுபுறம் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று கோடு வரைந்து அவர்களுக்கு வழிவிடுங்கள் என்று வரைந்து எழுதி வைத்திருக்கிறார்கள், முதலில் சாலையில் எல்லா லேன்களிலும் செல்லும் இருசக்கர வாகனங்கள் வழிவிட்டால்தான் பிற வாகனங்களே செல்ல முடிகிறது என்ற நிலையை எப்போது மாற்றப்போகிறார்கள்? இரண்டாவது நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் லைனில் பாதியை குறுக்கி இருசக்கர வாகனம் செல்லும் வழி என்று வரைந்துவைத்திருக்கிறார்கள், சிசிடிவி கேமரா என்பது மருந்துக்கும் இல்லை, சுங்கச்சாலைகள் என்பது குண்டும் குழியுமான சாலைகளே, இதெல்லாம் போக்குவரத்து துறையின் கட்டமைப்பின் கேலிக்கூத்துகளே அல்லாமல் வேறு என்ன?
“எப்படியும் செத்துத்தொலை!” என்று விதிமீறல்களை அரசும், சம்பந்தபட்ட துறைகளும் விட்டுவிடலாம், எனினும் சாலையில் இதுபோல நிகழும் விபத்துகள் தற்கொலைகள் மட்டுமல்ல, கொலைகளும் கூட, உங்களால் முடிந்தால் இதை உங்கள் வாகனம் ஓட்டும் பிள்ளைகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் சொல்லுங்கள்;

1. தலைக்கவசம் உங்கள் தலையை மட்டுமல்ல, குடும்பத்தின் நிலையையும் காப்பாற்றும்

2. சரியான லேன்களில் பயணிப்பது போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகனம் ஓட்டும்போது பதட்டத்தை குறைக்கும்!

3. சரியான நேர திட்டமிடல் மூலம் அவசரத்தையும் வேகத்தையும் தவிர்த்து உரிய இடத்திற்கு செல்லலாம், இல்லையென்றால் உலகத்தை விட்டே செல்ல நேரிடும்

4. ஒரு வழிப்பாதையென்றால், போக்குவரத்துத்துறை மாற்றாத வரை “எல்லா நேரங்களிலும்” அது ஒருவழிப்பாதைதான், நம்முடைய அவசரத்திற்கும் அலட்சியத்திற்கும் விபத்துகளை ஏற்படுத்தி பிறருக்கு பிரச்சனைகளையும் மரணத்தையும் தருவதை தவிர்க்கலாம்

5. சாலையில் தாறுமாறாய் சென்று நீங்கள் இறந்தால், அது இந்த அரசுக்கு வெறும் விபத்து, நீங்கள் வெறும் சடலம், அதுவே பிறரைக்கொன்று விட்டால், அது “அனாவசிய செலவுகளுக்கு வழிவகுக்கும், உங்கள் உறக்கத்தை நிரந்தரமாக பறிக்கும் ஒரு துயரம்” என்பதை நினைவில் நிறுத்துதல் நலம்

6. உங்களுக்காக கல்விக் கனவுகளுடன் காத்திருக்கும் பிள்ளையைப் போல, தன் மருத்துவத்திற்கு காத்திருக்கும் பெற்றோர்களை போல, அம்மாவுக்காக காத்திருக்கும் குழந்தைகளை போல, எத்தனையோ உறவுகளும், அதைச்சார்ந்த கனவுகளும் சாலையில் செல்லும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்டு, மனதில் நிறுத்தினால் நன்மை!

7. சாலையில் நடக்கும்போது, கடக்கும்போது, வீட்டு தாழ்வரத்தில் மொபைல் போனை நோண்டிக்கொண்டு நடப்பதுபோல நடப்பதை தவிர்க்கலாம், வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தால் வழிப்பறித் திருடர்கள் மொபைலை பறிக்கும் அளவிற்கு மொபைலில் மூழ்காதிருப்பதும், சாலையை கடக்க சீப்ரா கிராஸிங்கையோ, நடைமேடைகளையோ உபயோகிப்பது நலம்.

8. விதிகளை மதிப்பது, நமது விதியையும், மற்றவர் விதியையும் நிர்ணயிக்கிறது

9. பதினெட்டு வயதுக்கு முன் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கித்தந்து சாலையில் தெறிக்கவிடுவது பெருமை அல்ல, சிறுமை!

10. சாலையில் தாறுமாறாக செல்வதே விரக்தியில்தான் என்றால், உறுப்பு தானம் செய்வதற்கு கையெழுத்திட்டு பின் வீட்டிலேயே செத்துவிடுங்கள். சாலையை கடக்க உயரமான தடுப்புகளில் ஏறி குதிப்பவர்களும் கூட இதையே பின்பற்றலாம்!

 11. “நில்” என்னும் நிறுத்தகோட்டை மதித்து நிற்பதால் உங்கள் தரம் தாழ்ந்துவிடாது!
12. ஒரு மாபெரும் ஜனநாயகத்தில் குறைந்த பட்சம் சாலைவிதிகளை கூட பின்பற்றாத மக்கள் இருக்கும் போது அவர்களுக்கு மோசமான ஆட்சியாளர்களே வாய்ப்பார்கள்!

இறுதியாக அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் ஒன்று, ஆப்கானில் வன்முறையை வளர்ந்துவிட்ட அமெரிக்காவுக்கு பின்னாளில் அதுவே தண்டனையாக மாறியது, ரவுடிகளை வளர்ந்துவிட்ட பிறகு, பெரும்பாலும் அந்த ரவுடிகளாலேயே சில காவல்துறை அதிகாரிகளின் உயிர்களும், அரசியல்வாதிகளின் உயிர்களும் பறிக்கப்பட்டது, இப்போதும் அதுவே தொடர்கதையாக தொடர்கிறது, அதுபோல “மக்கள்தான்” சாகிறார்கள், நாம் எப்போதும் “சைரன்” கொண்ட வாகனத்தில், காவல்துறை
புடைசூழ போக்குவரத்தை நிறுத்தவிட்டு போகலாம் என்று நினைத்துக்கொண்டே சாலை கட்டமைப்புகளை அலட்சியப்படுத்தினால், வருங்காலத்தில் உங்கள் சந்ததியினரும் இதே சாலையில் சாதாரண “குடிமகனாக” எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செல்ல நேரிடும், அப்போது சாலையில் பாவங்கள் எல்லாம் குழிகளாக, ஓட்டுப்போடும் மனிதர்கள் எல்லாம் எமத்தூதுவர்களாக நிலைமை மாறி இருக்கும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...