Saturday 20 April 2019

தலைமுறை தூற்றும்

காற்று, நீர், நிலம் நச்சுப்படுத்தும் வேதானந்தா தனியாருடையது, இதற்காக அரசு ஏன் துடிக்கிறது?

வேதாந்தா பாஜகவுக்கு வெளிப்படையாகவே நன்கொடை தந்திருக்கிறது, ஒவ்வொரு கார்ப்பரேட்டுகளும் தேர்தல் நிதி என்றும் நன்கொடையென்றும் கார்ப்பரேட்டுகளிடம் வாங்குவதெல்லாம் நன்கொடை என்று சொல்லிக்கொண்டாலும் அதுவும் லஞ்சமே, காசுக்கொடுத்தவன் “எது எப்படி இருந்தாலும் ஆலையை தொடர்ந்து இயக்குவோம்” என்று செல்லுவதற்கான துணிச்சலெல்லாம் நம்முடைய “நீதி வழுவாத நீதிமன்றங்களாலும்” “நச்சைக் கலக்காத அவர்களுடைய நேர்மையான வியாபாரத்தின் மூலம்” என்று நினைத்துவிட்டால் நம்மை விட முட்டாள்கள் இருக்க முடியாது, நம் நாட்டில் வேதாந்தா என்றில்லை, தாமிரபரணியின் நீர் உறிஞ்சும் கோலா கம்பெனியும், மொத்தமாய் நீர் உறிஞ்சும் கார் கம்பெனிகளும், குடிக்கும் நீரை அரசு சுத்திகரிக்காமல் அதையும் வியாபாரமாக்கிய தனியார் நிறுவனங்களும், சாயப்பட்டறைகளும், அரசின் கூடங்குளமும், மீத்தேனும் என்று தொழில் வளம் என்ற பெயரில் நாட்டில் ஏகப்பட்ட தொழிற்சாலைகள் மண்ணை, நீரை, காற்றை மாசுப்படுத்தும் பணியை கனகச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன! 

அதுவும் நீதிமன்ற தீர்ப்பு வரும் நாளுக்கு முந்தைய தினம் பெப்ஸிக்கோவின் இந்திரா நூயி பிரதமரை சந்தித்துப் பேசுகிறார், கார்ப்பரேட்டுகள் பிரதமரை சந்திப்பது எளிது, விவசாயிகள் சந்திப்பதுதான் கடினம், இந்தக் கார்ப்பரேட்டுகளும் அரசுக்கும் உள்ள இணக்கத்தில் மக்கள் போராட்டம் செய்தும், தங்கள் உயிர்களை விட்டும்தான் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது!

இத்தனை துணிச்சல் கார்ப்பரேட்டுகளுக்கு, கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் இறைக்கும் காசினாலும், எதையும் ஏற்பாடு செய்து தரும் சாமர்த்தியத்தாலும் வருகிறது!
மைலாப்பூரில் ஒரு கடையில் முதலாளி பிரத்யேகமாக தன் காரை அதிகாரிகளின் சுற்றுலாவிற்கென்றே வைத்திருப்பதாக, “இதையெல்லாம் செஞ்சுதான் இங்கே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கு” என்று யாரிடமோ நொந்துக்கொண்டிருந்தார், மிக சிறிய கடைகளுக்கே இப்படியென்றால் வேதாந்தா போன்ற பெரிய நிறுவனங்கள் துணிச்சலாய் நிற்பதில் ஆச்சரியமில்லை!

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் “பணம்” மட்டுமே தெரிகிறது, நாளை நச்சுப்பட்ட இந்தப் பூமியில் அவர்களின் வாரிசுகள் பணத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தெரியவில்லை!

நம்முடைய முன்னோர்கள் சுதந்திரம் வாங்கித்தந்ததாய், மரம் நட்டு வைத்ததாய், காடு வளர்த்ததாய், அணைகள் கட்டியதாய், குளங்கள் வெட்டியதாய் பெருமைப்பட்டுக் கொள்கிறோம், அவர்களால் வாழ்கிறோம், ஆனால் நாளை நம் சந்ததி (அரசியல், அதிகார, தொழில் மட்டத்தையும் சேர்த்து) என்ன சொல்லும்,
“சில கோடிகளுக்காக என் அப்பன் இந்தப்பூமியை பாலைவனமாக்கினான்”
“சில கேடிகளுக்காக என் அப்பன் இங்கேதான் பலரை சுட்டுக்கொன்றான்”
“சில கோடிகளுக்காக என் அப்பன் இந்தக் காடு அழித்தான்”
“சாதிக்காக என் அப்பன் கொலைகாரர்களை ஆதரித்தான்”
“பதவிக்காக என் அப்பன் பல நூறு பேர்களையும், சில ஊர்களையும் கொன்றான்”
“சில ஆயிரங்களுக்காக என் உறவுகள் தங்கள் உரிமையை விற்றாரகள்”
“சில முதலாளிகளுக்காக என் அப்பன் புற்றுநோயை இந்த மக்களுக்குத் தந்தான், அது இப்போது எனக்கும் இருக்கிறது”
இப்படித்தான் வருங்காலம் மாறும், இந்த அரசியல் நன்கொடைகளை உடனே தடைசெய்யாவிட்டால்! அதற்கு சட்ட அமைப்பே மாற வேண்டும், மக்களுக்காக மாற வேண்டும் என்றால் ஒரு நூற்றாண்டேனும் ஆகும், இது அரசியல்வாதிகளின் சம்பளம் ஏற்றும் பிரச்சனையில்லையே!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!