Saturday 20 April 2019

சீருடையில் ஒளிந்துக்கொள்கிறார்கள்

அரசியலில், தனிப்பட்ட வாழ்க்கையில், பொதுவெளியில், அலுவலகத்தில், கல்லூரியில் என்று எத்தனை இடங்களை எடுத்துக்கொண்டாலும், பெண் தவறிழைத்தாலும், அல்லது பெரும் போட்டியாய் தோன்றினாலும், அல்லது ஆணின் இச்சைக்கு அடிபணிய மறுத்தாலும் அல்லது வேறு சாதியையோ, மதத்தையோ சேர்ந்தவளாய் இருந்தாலும் அல்லது அவர்களின் கண்ணுக்கு அழகாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும், குழந்தையாய் இருந்தாலும், சில (பல?!) ஆண்களுக்கு அது உள்ளூர இருக்கும் சாக்கடையை கிளறி விடுகிறது, அப்படிப்பட்ட சாக்கடையில் இருந்து விழும் வார்த்தைகள் பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தவே செய்யும், பொதுவெளியில் போராடும் பெண்ணின் மார்பகத்தில் கையை வைத்தவன் புகைப்படத்தை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் போட்டு, அவள் மார்பகம் பற்றியும், நடத்தைப் பற்றியும், மதத்தை பற்றியும் இகழ்ந்து புறம் பேசும் பல ஆண்களின் குரூரம் அறுவெறுப்பைத் தருகிறது!

இப்படிப்பட்ட ஆண்களின் மனநிலையெல்லாம் சமூகமும் சட்டமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் வரை மாறாது, பாலியல் ரீதியாக பத்து வயதுக்கு கீழே உள்ள ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் துன்புறுத்தியவன் கூட “பழகிவிட்டது மாற்றிக்கொள்ள முடியவில்லை” என்றான், ஏன் இந்த நிலை என்னும் கேள்விக்கு பதில்கள் பலவாக இருக்கலாம், ஆனால் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான், அது நேர்மையற்ற நோய்மையுற்ற நம் சமூகமும் சட்டமும் மட்டுமே!

தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று எதுவும் கதைக்குக்கூட பெண்களை உயர்த்திப்பிடிப்பதில்லை, எத்தனை உரித்துக்காட்ட முடியுமோ அத்தனைக் காட்டி, எத்தனை பலவீனமானவளாக காட்ட முடியுமோ அத்தனை பலவீனமாக்கி தோற்றுப் போகிறவளாக, அழுகிறவளாக, தற்கொலை செய்துக்கொள்கிறவளாகவே காட்டுகிறார்கள், குழந்தைகளின் வயதுக்கு மீறிய பாடல்களை பாட வைத்தும், அதற்கு ஆட வைத்தும் நிகழ்ச்சிகள், ஆண்களின் உள்ளாடைகளுக்கும் கூட பெண்களே விளம்பர தூதுவர்கள், இப்படியே வளர்ந்து இன்று பொதுவெளியில் போராடும் பெண்ணின் மேல் கைவைக்குமளவிற்கு சட்டமே துணைபோயிருக்கிறது!

கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறது, பெண்களுக்கு பாதுகாப்பற்ற தேசமாக இந்தியா முதலிடத்திற்கு வந்திருக்கிறது, ஆண்குழந்தைகளின் வளர்ப்பில் மாறுதல் கொண்டுவர, ஏற்கனவே பிறழ்ந்து கடுமையான குற்றவாளிகளாய் மாறிவிட்டவர்களை தண்டிக்க இந்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது?

ஒரு கலெக்டரின் கைபேசி தொலைந்துப் போனால் ஒரு பொழுதில் கண்டுபிடிக்கும் காவல்துறை, ஒரு தேசிய கட்சித் பெண் தலைவரை பகடி செய்தால் உடனே கைது செய்யும் காவல்துறை, தங்கள் சம்பளத்தைக் கூட்டிக்கொள்ள உடனே தீர்மானம் இயற்றும் சட்டமன்றம், அரசியல்வாதிகளுக்கு எளிதாகும் சாலைப்பயணம், என எதுவுமே இங்கே எளிதாய் கிடைப்பது ஆள்பவர்களுக்கு மட்டுமே, மக்களுக்கு அல்ல!

காணாமல் போன அடிப்படை நேர்மையும், பலியிடுவதற்காகவே நேர்ந்துவிட்ட ஆடுகளை போல மந்தையாகிவிட்ட மக்கள் கூட்டமும், இன்னமும் பெரும்பாலான பதவிகளில் நிறைந்திருக்கும் ஆண் சமுகமூம் இருக்கும் வரை மனநிலையில் வக்கிரம் மிகுந்த இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை செய்யும் ஆண்களுக்கு அவர்கள் கருணை காட்டவே செய்வார்கள், ஏனேனில் அவர்களுக்குள்ளும் பெண் மீதான போதையும் வக்கிரமும் ஒளிந்துக்கொண்டும் தயங்கிக்கொண்டும் இருக்கிறது, அவ்வப்போது அவரவர் சீருடையில் ஒளிந்துக்கொள்கிறார்கள், காலம் இவர்களுக்கு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!