Saturday, 20 April 2019

சிறு மலர்களின் மரணங்கள்

கீழ்ப்பாக்கம் கல்லறையில் நின்றுகொண்டிருக்கிறேன், என்னை சுற்றிலும் புதைக்கப்பட்ட சிறுமலர்கள், ஆமாம் அந்தக்
குழந்தைகளை பிணங்கள் என்று எப்படிச் சொல்வது? உடன் பணிபுரியும் சகோதரியின் மூன்று மாதப் பெண்குழந்தை இதயத்தின் கோளாறில் இறந்துவிட்டது, மனதுக்குள் ஆய்ந்தறியாத மருத்துவத்தின் மீதும், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, புற்றுநோயினால் பல குழந்தைகள் இறக்கும் நிலைக்கும், இன்னமும் நீர், நிலம் என்று காசுக்காக வருங்கால சந்ததிக்களுக்கு இந்தப் பூமியை இல்லாமல் ஆக்கும் அத்தனை காரணிகளின் மீதும் அறசீற்றம் வருகிறது, நாள்தோறும் வியாதிகளுடனான குழந்தைகளின் படங்களும், அவர்களுக்கான விண்ணப்ப கோரிக்கைகளும் மனதில் அலையடிக்கிறது, அத்தனை பேருக்கும் உதவ முடியாத இயலாமை ஏனோ நெஞ்சை அழுத்துகிறது!

நேற்றிரவு குழந்தை இறந்துவிட்டாள் என்று செய்திச் சொல்லி அழுத தாய்க்கு எந்த ஆறுதலையும் கூற முடியவில்லை, புத்திர சோகம் என்பது எந்தக்காலத்திலும் மறையாதது, நான் பார்த்தறியாத குழந்தையை அந்த நிலையில் பார்க்க மனம் இடம் தராவிட்டாலும், சூழ்நிலை என்னை இடுகாட்டுக்கே இட்டுச்சென்றது, ஒரு சிறிய தேவதை, பூமியின் பிரச்சனைகள் தாங்காமல் ஒரு நிரந்தர துயில் கொண்டதை போல உறங்கிக்கொண்டிருந்தாள், “ஏதாவது அற்புதம் நடந்து நீ கொஞ்சம் கண்ணைத்திறந்தால் என்ன பாப்பா?” என்று மனதுக்குள் போரிட்டுக்கொண்டிருந்தேன், “தயவு செய்து புதைக்க வேண்டாம்” என்று மனதுக்குள் ஒரு கூக்குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது, அவளுக்கு மலர்களை எடுத்துச்செல்லவில்லை, மனம் முழுக்க நீ திரும்பி வந்துவிடு என்ற பிரார்த்தனையை மட்டுமே அவளிடம் கோரிக்கையாக வைத்தேன்!

வெறுமையான மனதுடன் கல்லறை முழுக்க செதுக்கப்பட்ட பெயர்களையும் அவர்களின் வயதை குறிக்கும் வாசகங்களையும் படிக்கிறேன், ஒருநாள் முதல் ஆறு ஏழு வயது வரை இறந்தவர்களின் கல்லறைகள் கண்ணில் படுகிறது, ஒரு நாளில் இறந்தாலும், ஒரு வயதில் இறந்தாலும், அல்லது அறுபதில் இறந்தாலும் பெற்றவர் இருக்க, பிள்ளைகள் மரணிப்பது காலக்கொடுமையல்ல, மாறிவிட்ட நம் சுற்றுப்புறத்தின், நம் வாழ்வியலின், நம் பேராசை அரசியலின் கொடுமை, இதெல்லாம் எப்படிக் காரணம் என்று கேட்டுவிடாதீர்கள், சந்தைக்கு வியாதிக்கு முன்னே புதிதாய் வரும் மருந்துகளும், அவற்றிற்கென்றே உருவாக்கப்படும் வியாதிகளும், ஆண்டுக்கு எட்டுலட்சம் பேர் புற்றுநோயால் இந்தியாவிலும், எண்பது லட்சம் பேர் உலகளவில் இறக்கும் செய்திகளும், கூடங்குளம், ஸ்டெர்லைட், மீத்தேன் என்று இயற்கையைச் சுரண்டி மாசுப்படுத்தி மண்ணை மலடாக்கி, உயிர்களை விலையாக்கும் அரசுகளும், கொன்று குவிக்கும் ஆயுதங்களும் உங்களுக்கு எதையும் சொல்லவில்லை என்றால் நேராக சுடுகாட்டுக்குச் சென்று கணக்கெடுத்துக்கொள்ளுங்கள், அதிலும் உங்களுக்கு உண்மையான கணக்கு கிடைக்காது, புதைப்பதற்கு இடம் இல்லாமல் ஒரு கைப்பிடிச்சாம்பலாய் ஆகிறோம், அதிலும் கணக்கில் வராத காணாமல் போனவர்கள் பட்டியல் ஏராளம்!

பள்ளியில் படிக்கும்போது ஆயா இறந்துவிட்டார்கள், அதுவும் கடைசி பேத்தியாக நான் வாயில் பாலுற்ற அதுவரை இழுத்துக்கொண்டிருந்த உயிர் பிரிந்தது, கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரிக்க, ஏதோ ஒரு வெறுமையோடு எரியும் மற்ற பிணங்களை, சிதறிக்கிடந்த எலும்புகளின் நிலையை வேடிக்கைப்பார்த்தேன், “ஆயா நீ நிம்மதியா இரு” என்று மட்டும் மனதுக்குள் கூறிக்கொண்டேன், அப்பாவை கைப்பிடிச் சாம்பலாய் மின்தகன மேடையில் இட்டுக்கொண்டு வந்து கொடுத்தப்போது, “அப்பா நீ திரும்பி வா” என்று அழைக்கவில்லை, எப்போதும் என்னுடன் இருப்பது போலவே இப்போதும் உணர்வு!

ஆனால் இந்த மலர்களின் கல்லறைகளைக் காணும் போது ஒவ்வொரு தாயின் துயரமும் மனக் கண்ணில் நிழலாடுகிறது, நோயினால் இறந்தவர்கள் என்றில்லாமல் பாலியல் வன்கொடுமையினால் இறந்தவர்களின் நினைவும் ஒரு சேர மனதை அலைக்கழிக்கிறது, ஒருவேளை இவர்கள் மறுபடியும் அவர்களுக்குப் பிள்ளைகளாக பிறந்திருக்கக்கூடும், இல்லையெனில் “நீங்கள் மீண்டும் பிறந்து விடுங்கள்!” என்று மானசீகமாக வேண்டுகிறேன், இந்தப் பூமியைக் காக்க போராடும் மனிதர்கள் நிச்சயம் உங்களுக்கான நீரையும், நிலத்தையும், காற்றையும் மிச்சப்படுத்தி வைப்பார்கள், இந்த அயோக்கிய அரசியல்வாதிகளும், நேர்மையற்ற அதிகாரிகளும் அகற்றப்பட்டு உங்களுக்கான ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை, மனிதர்கள் உருவாக்கிய ஆரோக்கிய சீர்கேடுகள், மன அழுத்தங்கள் இல்லாத சமுதாயத்தை இந்த நிகழ்கால மனிதர்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கிறேன், நீங்களும் விதையுங்கள், பூமியில் மலர்கள் மலர்ந்து சிரிக்கட்டும்!!!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...