Saturday 20 April 2019

ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கிறது பாடமுறைகள்

நாங்கள் படித்தது தனியார் பள்ளி, பள்ளியில் வேதியியல் வகுப்பு நடக்கும்போது யார் கேள்விகளை கேட்டாலும், ஒரு ஆசிரியை “சாக்பீஸை” வீசி எறிந்து, “முந்திரிகொட்டை பாடம் நடத்தி முடிச்சதும் கேள்வியை கேள்” என்பார், ஆனால் அதற்குபிறகும் எங்களுக்கு கேள்விகள் கேட்க நேரமே இருக்காது, அவர் எழுதியதை ஒருமுறை படித்துவிட்டு, பாடத்தை முடித்துவிடுவார், அதே போல புவியியல் ஆசிரியை புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, “fillers” எனப்படும் ஆங்கில வார்த்தைகளை நடுநடுவே மானே தேனே என்று போட்டுக்கொள்வதை போல போட்டு படித்துவிட்டு பாடம் நடத்தி முடித்துவிடுவார்! அதன்பிறகு எங்கள் வேதியியலில் ஒரு சிறந்த ஆசிரியர் வந்தார் என்பது வேறு கதை!

பள்ளியில் இப்படி என்றால் சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பாடத்தில் குறைவான மார்க் போட்டு பெயில் என்றார்கள், அதெப்படி என்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 70 க்கும் அதிகமாக மார்க் வந்தது, அதிலும் எனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், ஒரு பேப்பர் மறுகூட்டலுக்கு பல வருடங்களுக்கும் முன்பு 750 ரூபாய்க்கும் அதிகமாக கட்ட வேண்டியிருந்தது, என்னுடன் படித்த பெற்றோரை இழந்த தோழி, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அண்ணன் காசு தரமாட்டான் என்று படிப்பை விட்டுவிட்டு சென்று விட்டாள்!

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மார்க் திருத்தி வரும்போது, நியாயமாய் பல்கலைக்கழகங்கள் வாங்கிய பணத்தை திருப்பித்தந்து மன்னிப்புக்கடிதம் அல்லவா கொடுக்கவேண்டும்? பொதுவாய் பல கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பாடங்களையே எடுக்காமல் பரீட்சை வைப்பதும், “இன்டர்னலில்” கைவைப்பேன் என்று மாணவர்களை மிரட்டி வைப்பதும் சகஜமான ஒன்று, ஆராய்ச்சி படைப்புகளுக்கும் யாரையோ கவனிக்க வேண்டும் என்று நிர்மலா போன்ற பேராசிரியர்கள் தேவையற்ற வேலைகள் பார்ப்பதும் உண்டு, பணம், வசதி என்ற வெறியின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் இன்று செய்தியில் மின்னும் அண்ணா பல்கலைகழகத்தின் மார்க் மோசடி ஊழல்!

தனியார் பள்ளி என்றாலும், அரசு பள்ளி என்றாலும் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை மட்டும் வைத்து புரிந்துகொள்வது எல்லா பாடங்களிலும், எல்லா வேளைகளிலும் எளிதல்ல, பெற்றவரும் மெனக்கெட வேண்டும், டியூசன் அனுப்பவேண்டும், பண வசதியில்லையென்றால், பெற்றவர்களுக்கு கல்வியறிவு இல்லையென்றால் அந்தப்பிள்ளைகள் சுயமுயற்சியில், புத்தியில் படித்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் பெரும் சிரமமே, இப்படிப்பட்ட கல்வி ஏற்றத்தாழ்வும், மாணவ மாணவிகளுக்கு கடுமையான மனஅழுத்தத்தை தரும் பாட முறைகளையும், ஆசிரியர்களையும், பாரபட்ச நடைமுறைகளையும் வைத்துக்கொண்டு, தனியார் கொழிக்க நீட் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ கனவுக்கு சாவு மணி அடித்திருக்கிறோம்!

எனக்கு தெரிந்த இரு பெண்களில் ஒருவர் அரசாங்க கல்லூரியிலும், மற்றொருவரை தனியார் கல்லூரியிலும் “நர்சிங்” படிக்கிறார்கள், அரசாங்கக் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு கட்டிய கட்டணத்துக்கு பில் கேட்கக்கூட பயம், கைபேசியை எடுத்து பொறுப்பாளாரிடம் பேச, இது அரசாங்கக்கல்லூரி எதுவும் சரியாக நடப்பதில்லை முன்னே பின்னேதான் இருக்கும் என்றார், இன்னமும் அந்த உரையாடலை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை, சில அடிப்படை கேள்விகளை கூட கேட்க பழங்குடி இனத்தில் இருந்த வந்த அந்தப்பிள்ளைக்கு அவ்வளவு பயம், “நீ இலவசமாய் கற்கவில்லை, கட்டணம் கட்டித்தான் படிக்கிறாய், பயப்படாதே!” என்று அவ்வப்போது தாங்க முடியாத கோபத்தில் திட்டிவிட்டு வருத்தப்படுவது உண்டு!

மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கிறது நம் பாடமுறைகள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் திறமையும் லாவகமும் எல்லா ஆசிரியர்களுக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை, அதைவிட ஆசிரியர்கள் மற்றுமொரு பெற்றோர்கள் என்று நாங்கள் படிக்கும்போது போல் உணர்ந்தது இப்போது மாறியிருக்கிறது, வீட்டின் அருகே அரசுப்பள்ளி இருக்கிறது, “ஏய் சனியனே” என்று ஆசிரியர் விளிப்பது ஜன்னல் வழியே காதில் விழுந்திருக்கிறது, “படிப்பே வரதில்லைங்க” என்று தனியார் பள்ளியில் பிள்ளையின் முன்பே பெற்றவரிடம் சொன்ன ஆசிரியரை கடந்திருக்கிறேன், “படிப்பு” மிகப்பெரும் சுமையாக மாறிக்கொண்டிருக்கின்றது, இங்கே ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளகளை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கே பயிற்சி தேவைப்படுகிறது!

ஒரே கல்வி, அரசாங்க கல்வி, தரமான கல்வி, அதுவும் இலவசக் கல்வி எல்லோருக்கும் என்று நடைமுறை படுத்தப்படும்போது இங்கே இடஒதுக்கீடு தேவைப்படாது, தற்கொலைகள் நிகழாது, அதற்கு விவசாயம் தெரிந்தவன் விவசாய மந்திரியாக, கல்வியாளர் கல்வி அமைச்சராகவும், அந்தந்த துறையில் மேம்பட்டவர்களை மந்திரிகளாக நம் மக்கள் தேர்தெடுக்க வேண்டும், இது ஏதோ ஒரு யுகத்தில் நிகழும் என்று நம்புவோமாக!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!