Saturday, 20 April 2019

உறுப்புகள் மறைக்கப்படுகின்றன!


தன் காதலை நிராகரித்தவனை
காதலென்றுக்கூறி
உடல்தின்று ஏய்த்தவனை
மூக்கு சரியில்லை
முழிசரியில்லையென்று
பெண்பார்க்கும் படலத்தில்
வியாபாரம் செய்தவனை
பிள்ளையில்லையென்று
கட்டியவளை நிராகரித்து
மறுமணம் செய்தவனை
தன் மீது அமிலம் வீசியவனை
அவளின் உறுப்புகள் அறுத்தவனை
வரசட்சணையின் கொடுமையில் எரித்தவனை
வார்த்தைகளால் காயம் செய்தவனை
உடல் தோற்றத்தையும் நிறத்தையும்
கேலிசெய்தவனை
உழைக்க வக்கில்லாமல் பெண் உழைப்பை
உறிஞ்சுபவனை
குடித்துவிட்டு கொடுமை செய்பவனை
சந்தேகத்தால் வாட்டுபவனை
அறையில் கட்டியணைத்து
பின் உறவின் முன்னிலையில் சிறுமைப்படுத்துபவனை
அன்பின்றி கருணையின்றி காயப்படுத்துபவனை
ஆடைவிலக காத்திருக்கும் காமுகனை
அவனை இவனை எவனையும்
பெண்கள் கத்தியால் சாய்க்கவில்லை
அமிலத்தில் தோய்க்கவில்லை
வன்கொடுமைச் செய்து தூக்கில் தொங்கவிடவில்லை
பலர் அறிய சிறுமைப்படுத்துவதில்லை
பழிக்கொள்ளாமல் எல்லாம் மறந்து
தன்னைச்சுருக்கி குடும்பம் வாழ
தோள் கொடுக்கும் பெண்களின்
“பிடிக்கவில்லை” என்ற
ஒற்றைச்சொல்லின்
ஏமாற்றத்தை தாங்க முடியா
கோழைகளின் தேசத்தில்
பிறந்த பெண்குழந்தைகளின்
உறுப்புகள் அவசரமாய்
மறைக்கப்படுகின்றன!
 


Image may contain: 2 people

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...