Thursday, 16 May 2019

விபத்துகள் எனும் தற்கொலைகள்

இதுவரை கடந்த ஒரு வருடத்தில் என்னுடன் பணிபுரிபவர்கள் ஆறு பேர் விபத்தில் சிக்கியிருக்கிறார்கள், அதில் எல்லோரும் விழுந்து காயப்பட்டபின் தன் தலை தப்பித்தது தலைக்கவசத்தால் என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள்! நேற்றும் கூட 16 வயது மகனுக்கு பைக் வாங்கிக்கொடுத்த தந்தையால், மகனுக்கும் நண்பனுக்கும் விபத்து ஏற்பட்டு, தலைக்கவசம் அணியாத நண்பன் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து மரணம்!

அரசாங்கம் சாராயம் விற்பதை நிறுத்தாத போது ஏன் தலைக்கவசம் (ஹெல்மெட்) போட வேண்டும்? என் தலை என் உரிமை, அதற்கு ஏன் நீங்கள் காசு பிடுங்குகிறீர்கள்? இப்படியெல்லாம் பலரின் கருத்துகளை காணவும் கேட்கவும் முடிகிறது, இதெல்லாம் “அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்!” என்ற வகையறாக்கள்தான், இந்த அரசாங்கம் சாராயம் விற்பதால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறவர்களும் விபத்துகளும் அதிகரித்திருப்பது மறுக்க முடியாத உண்மை, இந்த அரசாங்கம் திருந்தி, குடிமக்கள் குடியை விட்டு திருந்தி, அதன் பிறகு அரசு சட்டம் போடட்டும் பிறகு நான் ஹெல்மெட் அணிகிறேன் என்பவர்கள் எல்லாம் தகுதியிருந்தால் ஒன்று இராணுவத்தில் சேர்ந்துவிடலாம், இல்லையென்றால் உறுப்பு தானத்திற்கு எழுதிவைத்துவிட்டு, தன் குடும்பத்துக்காக ஒரு பெரிய தொகையை விபத்து காப்பீடாக இன்றே எடுத்து வைத்துக்கொள்ளலாம்!
என் பள்ளி நண்பன், பள்ளியில் படிக்கும்போதே அவனுடைய தந்தை இறந்துவிட, பள்ளியின் இறுதியாண்டை முடிக்காமலேயே பணியில் சேர்ந்துவிட்டான், அவனுக்கு மனநிலை பிறழ்ந்த ஒரு மூத்த சகோதரி, கால ஓட்டத்தில் அவனுக்கு திருமணமாகி நான்கும் இரண்டு வயதுமாக இரண்டு பிள்ளைகள், மனைவிக்கு தாய்மொழியைத் தவிர எதுவும் தெரியாது, சாதாரண நடுத்தர வர்க்க ஜீவனம், எப்போதும் அலுவலக பேருந்தில் வருபவன் அன்றைக்கு வேறு ஒருவருடன் பைக்கில் வர, கண்டைனர் லாரி மோத, தலைக்கவசம் இல்லாமல் பின்னே உட்கார்ந்திருந்தவன் அந்த இடத்திலேயே மரணம், மனைவிக்கு தாய்மொழியை (மலையாளம்) தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாய் வீடு சென்றுவிட, அந்த மனநிலை பிறழ்ந்த சகோதரியை ஏதோ காப்பகத்தில் சேர்த்து விட்டதாக தகவல்! வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல பின்னே உட்கார்ந்திருப்பவருக்கும் ஹெர்மெட் அவசியம்தானே? அது இருந்திருந்தால் இன்று எங்கள் நண்பன் எங்களோடு இருந்திருப்பான், நான்கு வயதில், இரண்டு வயதில் ஆன இரு பிள்ளைகளுக்கு தந்தையின் அரவணைப்பு கிடைத்திருக்கும்தானே?

முப்பது நாப்பது கிலோ மீட்டர் வேகத்தில் நகர நெரிசலில் மெதுவாக செல்பவனுக்கு எதற்கு ஹெல்மெட் என்பது பெரும்பாலானவரின் வாதம், ஒரே ஒரு கேள்விதான், “இந்த வேகத்தில் நீங்கள் சாலையின் இடதுபுறத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட லேனில் தான் செல்கிறீர்களா?” ஒன்றிரண்டு பேரைத் தவிர ஒரு சாலையில் “சிதறிய பட்டாணிகளை” போல, லாரிக்கும் பேருந்துக்கும் இடையே, பேருந்தையொட்டி உள்ள தடுப்புச்சுவரின் இடுக்கில், ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்களின் எதிரே, குறுகிய மேம்பாலங்களில் கூட ஓவர் டேக் செய்து என்று நீங்கள் செல்லாத இடம் ஏது? நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஒரு வாகனம் வந்து மோதினால் ஹெல்மெட் இருந்தாலும் நீங்கள் சிக்கி சிதையலாம், ஆனால் குறுக்கும் நெடுக்குமாக விதிமுறைகளை புறந்தள்ளி நீங்கள் முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது, ஏதோ ஒரு கனரக வாகனம் லேசாய் முட்டினாலும் நீங்கள் கீழே விழும் வேகத்திலோ அல்லது விழும் இடத்தில் உள்ள சாலையின் அல்லது தடுப்புச்சுவரின் தன்மையிலோ உங்கள் தலையில் காயம் ஏற்பட்டால் என்னவாகும் என்று யோசித்தீர்களா? அந்த நிமிடம் வீட்டில் காத்திருக்கும் உறவுகளின் மனநிலையை அல்லது உங்களின் வருமானம் நின்றுபோனால் அவர்களின் வாழ்வதாரத்திற்கான வழியைப்பற்றி, உங்கள் அலட்சியத்தால் சாலையில் மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றி யோசித்தீர்களா?

மண்டையில் முடி கொட்டிவிடும் என்று கவலைப்படுவதில் கூட அர்த்தமேயில்லை, தலைக்கவசம் அணியாமல் நான் பைக் ஓட்டியதே இல்லை, அதனால் தலைமுடிக்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை, அதைவிட தலைமுக்கியமா தலையில் உள்ள மயிர் முக்கியமா என்ற புரிதல் வேண்டும், ஆனால் யார் எது சொன்னாலும் “நான், எனது, என் உரிமை” என்றிருப்பவர்களை அறிவுரைகள் திருத்தாது, கடுமையான சட்டங்களே வழிக்கு கொண்டு வரும், இந்தச் சட்டம் தனிமனித உரிமை மீறல் அல்ல, பிற மனிதர்களின் பாதுகாப்புக்கு வழிச்செய்யும் ஒரு சிறு தொடக்கமே, சாலை கட்டமைப்புகள், ஊழலற்ற இயக்கம், விதிமுறைகளை மீறாத மக்கள் என்று நிறைய தேவைப்படுகிறது மாற்றத்திற்கு, முழுவதும் வந்தால் #விபத்துகள் குறையும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...