Thursday, 16 May 2019

கண்ணாடி_பிம்பங்கள்


அவளுக்கு என்னிடம்
ஆழ்ந்த நட்பு, நம்பிக்கை, காதல்
இதில் எது வேண்டுமோ
நிரப்பிக்கொள்ளலாம்

எப்போதும் எனக்காக
காதுகளைக்கொடுப்பாள்
நான் எப்போதாவதுதான்
அழைப்பேன்
எப்போதும் காண நினைப்பாள்
ஏதேதோ கதைகளைச் சொல்லி
பயணப்பட்டு வருவாள்
நான் வெட்டியாய் ஊர்ச்சுற்றினாலும்
அவளைக்காண தலைப்படுவதில்லை

பிறந்தநாள் என்றும்
வெற்றிகளுக்கு பாராட்டு என்றும்
அன்பாய் பரிசுகள் தருவாள்
அவள் கேட்டும்கூட எதையும்
நான் கிள்ளியும் தந்ததில்லை
என் குடும்பத்தோடு உறவாடுவாள்
எல்லோரின் நலத்தையும் நாடுவாள்
அவளை நலமா என்று
ஒருநாளும் நான் கேட்டதில்லை

எந்நேரமும் பிரியத்தோடு பேசுவாள்
ம்ம் என்ற என் ஒலியில்
ஒருவேளையில் கூட
பரிவே இருந்ததில்லை
எனக்காக வேலைகளை
தள்ளிவைப்பாள்
வேலை இருந்தாலும்
இல்லையென்றாலும்
நான் அவளை அரவணைத்ததில்லை

எப்போதும் சிறுதுளி அன்பையே
வேண்டுவாள்
காயங்களைத் தவிர வேறு எதையும்
நான் தந்ததில்லை
எப்படி என் நடத்தை இருந்தாலும்
எதையும் எளிதில் மறந்துவிடுவாள்
அவளின் சிறு சுணக்கத்தைக்கூட
பெரும் வன்மமென்று
நான் பெயரிடாத நாளில்லை

நிறைந்தக் கல்வியில்
நிறைக்குடமாய் அமைதியாய் இருப்பாள்
என் அனுபவ அறிவின் பெருமிதத்தில்
எதையும் கேட்க மறுத்து
நான் அவளை அவமதிக்காத நாளேயில்லை
ஆசையோடு ஒருநாள்
பார்க்கவேண்டும் என்றாள்
உலகப்பயணமென்று கதைச்சொல்லி
உள்ளூர் சந்தையின் உலா போதையில்
வழக்கம் போல் அழைப்பை ஏற்கவில்லை

எது எப்படி இருந்தாலும்
எனக்கு அவள் மீது அன்புண்டென்று
என் பயணங்களின் வழியில்
போனால் போகிறதென்று
அவளிடம் உரைப்பேன்
அந்தச்சிறுத்துளி பொய்யை
அவள் மெய்யென நினைத்து
மெய்சிலிர்த்துப்போவாள்
அதனால் என்ன
எந்தப்பொய்களும் இந்தச் சுயநல
வாழ்க்கையில் என்னை சுட்டதில்லை

வாழ்தல் ஒருமுறையென்று
எல்லோருக்குமாய் வாழ்ந்தவள்
“நான் இல்லாமல் போகும்போது
நீ கொஞ்சமேனும் மாறுவாயா?”
என்றாள்
“இரங்கற்பா எழுதி அதையும்
கரைத்துவிடுவேன்,
விபத்தோ இயற்கை மரணமாகவோ
அது இருக்கட்டும்,
எழுதுவது எளிதாக இருக்குமென்று”
நகர்ந்தேன் மனதில் கருணையில்லை!

நீங்கள் முகஞ்சுளிப்பது தெரிகிறது
கொஞ்சம் கண்ணாடியின் முன்
நின்றுப்பாருங்கள் நான் தெரிவேன்
உங்களுக்குள்!!!

#கண்ணாடி_பிம்பங்கள்


No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!