Thursday, 16 May 2019

நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு

இந்த வருடத்தில் ஒருநாள் பழைய அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்த சகோதரி உஷா, தன் மகளுக்கு நாட்டிய அரங்கேற்றம், மே மாதம் வைத்திருக்கிறேன், அந்த நாளில் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டார், நாடகம், நாட்டியம், பாடல்கள் என்று எல்லாவற்றிலும் இயல்பிலேயே இருக்கும் ஆர்வத்தாலும், உஷாவுக்காகவும், அரைநாள் விடுமுறை எடுத்தால் என்ன தோன்றியதாலும் சரி என்றேன், திடுதிடுப்பென்று “இல்லை, நீங்கள்தான் முக்கிய விருந்தினர், அதுதான் நிச்சயம் வரமேண்டுமென்று கேட்கிறேன்” என்று ஒரு ஆனந்த அதிர்ச்சியைத் தந்து, விடாப்பிடியாய் என் பட்டங்களை பெயருக்கு பின்னே வரிசைக்கட்டி அழகான இந்த அழைப்பிதழை அச்சிட்டு குடும்பச் சகிதமாய் வீட்டிற்கு வந்து அழைத்தார், முறையாய் நாட்டியம் பயின்றவர்கள், ஆசிரியர்கள் என்று அந்தக் கலைத்துறைச் சார்ந்த மேதைகளுடன், நான் எப்படி மேடையில் என்று தயங்கிய போது, “அமுதா உங்க மனசு எனக்குத்தெரியும், நீங்க வந்து மனசார செய்யும் வாழ்த்து எனக்கு வேணும், அதுக்குத்தான் கூப்பிடறேன், என் மகளுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும்” என்ற போது, மனதைப்படித்து, நேசிக்கும் மனிதர்கள் போகும் இடமெல்லாம் கிடைப்பதொரு வரமென்று உணர்ந்தேன்!

உஷாவின் கனவும், அயராத உழைப்பின், அவர் மகள் “ரம்யாவின்” நடனத்தில் தெரிந்தது, அம்மாவைப்போலவே அழகான பெண் குழந்தை, அம்மாவைப்போலவே தன்மையும் மென்மையான அணுகுமுறையும், அந்த மாலை வேளையில் ரம்யாவின் பெயருக்கேற்ப அந்த மாலைப்பொழுது ரம்யமாய் ஆனது, நாட்டிய மேதைகள் நிறைந்திருந்த சபையில், அற்புதமாய் ஆடிய அந்தக்குழந்தையின் நடனத்திற்கு பாராட்டுக்களையும், திறமை மேன்மேலும் வளர்ந்து ஒளிவிட வாழ்த்துகளையும் சொல்லி விடைப்பெற்றேன்!

இத்தனை மாதங்கள் கடந்து இத்தனை தாமதமாய் எழுதுவதற்கு காரணம், வழக்கமான வேலைப்பளூ என்பதை விட, மனம் நிறைய அன்பிருந்தாலும், நடன ஆளுமைகளின் மேடையில், வெறும் ரசிகையாய் அமர்ந்திருந்த தயக்கமே காரணம், இந்த வருடம் முடியப்போகும் இந்தக்கடைசி மாதத்தில், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்காதே என்று மனம் இடித்துரைத்ததின் வெளிப்பாடே இது!
உஷா, உன்னுடைய உழைப்பும் கனவும், இந்த வாழ்க்கைப்பாதையை உனக்கு வரமாக மாற்றட்டும், ரம்யாவிற்கு எப்போதும் சிறந்தவைகளே கிட்டட்டும்! God bless!

Image may contain: 2 people, text

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!