Thursday, 16 May 2019

சிலை அரசியல்

#சிலை _அரசியல்
முதலில் இந்திய மாநிலங்கள் கொடுக்கும் வரிகளில், திரும்பவும் மாநிலத்துக்கே பிரித்துக்கொடுக்கும் விகிதாச்சாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம், மகாராஷ்டிரா தொடங்கி குஜராத் வரை முதல் ஏழு இடங்களில், பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களும், வட இந்திய மாநிலங்களும் வரி ஈட்டுவதில் பெரும் பங்கு வகித்தாலும், மத்திய அரசிடம் இருந்து அம்மாநிலங்கள் திரும்பப்பெறும் அளவு அந்த மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்து இருக்கிறது, அதாவது, தமிழகத்தின் ஒரு ரூபாய்க்கு தமிழகம் திரும்ப பெறுவது 40 பைசா, கர்நாடகவுக்கு 47 பைசாவும், கேரளத்துக்கு 25 பைசாவும் மக்கள் தொகைக்கேற்ப கிடைக்கும் வேளையில், உபி பெறுவது 1.79 காசுகள், அதாவது மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல், மக்கள் நலனைப்பற்றிக் கவலைகொள்ளாமல் இருக்கும் மாநிலத்துக்கு இந்த மத்திய அரசு அதிக சலுகைத்தருகிறது, அதிக வரியை உபி தந்தாலும், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, கட்டிய வரிகளை விட அதிக வருவாய் உபி மற்றும் பீகார் மாநிலங்களுக்கு கிடைக்கிறது, இப்போது ஏன் பல கோடிகளில் ராமர் சிலையையும், பசுக்களுக்கு மந்திரம் ஓத பண்டிதர்களையும் இவர்கள் நியமிக்க மாட்டார்கள்?

சரியான நிர்வாகத்திறமை இல்லாமல் வரவையெல்லாம் மக்களின் மூடத்தனத்தை கொள்முதலாக்கி இப்படி வட இந்தியா மதத்தையும், மதக்கொள்ளையர்களையும் வளர்க்க, ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறப்பதும், பாலியல் வன்முறைகளால் குழந்தைகள் இறப்பதும், ஆம்புலன்ஸ் கூட இல்லாமல் மக்கள் தவிப்பதும் நிர்வாகத்தின் குறையே இன்றி வருவாய் பற்றாக்குறை அல்லவே!?

கல்வியில் இந்த நிதியை செலவிட்டால், மக்களின் ஆரோக்கியத்தில் செலவிட்டால் அவர்களுக்கு சிறந்த அறிவும் தெளிவும் வந்துவிடும், அப்படி வந்துவிட்டால் வெறும் ராம கோஷம் போட்டுக்கொண்டு, மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துக்கொண்டு இவர்கள் வட இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது, பெரும் வன்முறைகள் செய்ய இவர்களுக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்!

இப்படிப்பட்ட ஒரு நிலையில் வறுமையை மாற்ற நினைப்பவனும், அரசியல் காரணங்களால் புலம் பெயர்த்தப்படுபவனும், நம்முடைய பேராசை முதலாளிகளாலும் வழவழைக்கப்படுபவனும், வட இந்தியர்களாக வருமான கணக்குக்கு மக்கள் தொகையை உபியிலும் பீகாரிலும் கூட்டி விட்டு, தமிழகத்திலும் சில தென்னிந்திய மாவட்டங்களிலும் குடி பெயர்கிறார்கள்!
தமிழகத்தில் இப்படிக் குடிபெயர்ந்து அரசியலில் வியாபாரத்தில் பலம் மிக்கவர்களாய் மாறிப்போனவர்களும், குற்றவாளிகளாய் மாறியவர்களும் அதிகம், புலம் பெயர்ந்தாலும், சாதியாத்தாலும் மதத்தாலும் கட்டமைக்கப்பட்டவர்கள் சார்ப்பற்றவர்களாக மாறிவிட பலகாலம் ஆகும், அந்தக்காலம் வந்துவிடாமல் இருக்க, மதத்தை இங்கேயும் புகுத்துவார்கள், மொழியை திணிப்பார்கள், எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஆட்கள் உண்டு, தமிழ் மண்ணிலும் இந்தக்குடியேறிய மக்களை ஒருவிதமான மனநிலையில் வைத்திருக்க, பூர்வீகவாசிகளையும் குற்றங்கள் பெருக ஒருவித பதட்ட நிலையிலேயே வைத்திருப்பதுதான் அரசியல்!

இதற்கு நம்முடைய தெர்மாக்கோல் விஞ்ஞானிகளும், அணைக்கு ஜூரம் வந்ததை கண்டுப்பிடித்த மருத்துவர்களும், கஜா மக்களுக்கு கடவுளின் தண்டனை என்று சொன்ன மதிமந்திரிகளும் அதிக உதவி செய்வார்கள்!
இதில் மக்கள் போராட்டமெல்லாம் எளிதில் திசைமாற்றப்படுவதில் விந்தையென்ன? வேதாந்த குழுமத்தின் முதலாளி, ஆலையில் மாசு இல்லை என்பதை தூத்துக்குடியில் ஆலையின் அருகிலேயே தன் மொத்த குடும்பத்தையும் குடி வைத்து நிரூபிக்கலாம், நான் வரிகளை கட்டிவிட்டேன் என்பதை விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து நிரூபிக்கலாம், “நான் ஏழைத்தாயின் மகன்” என்பதை பிரதமர் முதலில் இந்தியாவில் இருந்துக்கொண்டு நிரூபிக்கலாம், வசதியாய் வெளிநாட்டில் தங்கிக்கொண்டு ஆலையில் நச்சு இல்லை என்றும், இந்தியாவின் சிஸ்டம் சரியில்லையென்றும், நான் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் என்றும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அமைதியாய் நடந்த ஜல்லிக்கட்டும் அரசியல்வாதிகளால் மட்டுமே கலவரமானது கண்கூடு, இவையெல்லாம் உதாரணங்களே, நீங்கள் எந்தப்போராட்டத்தை கையில் எடுத்தாலும் அதை மாற்ற ஒரு அரசியல்வாதி கோமாளியாக்கப்படுவார், கேளிக்கை நாயகர்கள் பரபர பட்டாசு வெடிப்பார்கள், ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் மீதோ, குழந்தை மீதோ மோசமான வன்முறை ஏவப்படும், எங்கோ ஒரு மதக்கலவரம் உண்டாகும், திடீரென புதிய ரூபாய் வரும் அதில் நம்மை கண்காணிக்கும் சிப் வரும் கதைகள் வரும், இப்படி எது வேண்டுமானாலும் நிகழும், நம்முடைய ஞாபகமறதியும், கேளிக்கை மனநிலையும், சாராய போதையும், இவர்களுக்கு நல்ல முதலீடு!

இந்தியா ஏழை நாடு அல்ல, பல கோடி மக்களின் மந்தை புத்தியாலும், எளிதில் பற்ற வைக்கும் சாதி மதத்தாலும், சில நூறு பேராசை அரசியல்வாதிகளாலும், பல லட்சம் அதிகாரிகளாலும், பெண்ணடிமைத்தனத்தாலும் ஏழைகளை பரம ஏழைகளாக மாற்றி உள்ளூரில் புதைத்தும், சில பணக்கார கொள்ளையர்களை பல கோடிகளுடன் வெளிநாட்டில் வாழ வைத்தும் கொண்டிருக்கிறது, இங்கே மனிதர்களை வறுமையால், எட்டாத கல்வியால், சாதியால், மதத்தால், நோய்களால், சாராயத்தால், சோதனை மருந்துகளால், முதலாளிகளின் பேராசையால், பாலியல் வன்முறைகளால் கொன்று சிலைகளை மட்டும் எழுப்புவார்கள், ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டிகளில் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், நாம் குனிந்து பரிசுகளையும் இலவசங்களையும் வாங்கிக்கொள்வோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!