Thursday, 16 May 2019

ஜனநாயகத்தின் வழிப்பறி

சம்பவம் 1;
உடன் பணிபுரியும் சகோதரி ஒருவரின் ஐபோனை பட்டப்பகலில் பைக்கில் வழிப்பறி செய்துவிட்டனர், சம்பந்தப்பட்ட ஏரியாவின் காவல்துறையில் புகாரை பதிய ஐபோன் விலை கேட்கப்பட்டு, அதில் 20 ஆயிரம் லஞ்சமாக கேட்கப்பட்டது, லஞ்சம் கொடுக்க மறுத்து, திரும்பி வந்துவிட்டார், பின் இணையத்தில் உயர் மட்டத்தில் புகார் செய்ய திரும்பவும் அதே காவல்துறை அதே அதிகாரிக்கு புகார் மாற்றப்பட, திரும்பவும் அதே தொகை கேட்கப்பட, அந்தத் திசைக்கே ஒரு கும்பிடு போட்டு வந்துவிட்டார்

சம்பவம் 2:
உடன் பணிபுரியும் ஒரு சகோதரரின் பைக்கை வீட்டு வாசலில் இருந்து டெம்போவில் திருடிச் செல்ல, அவர் காவல்துறைக்கு இரண்டு மூன்று நடந்து, லஞ்சமில்லாமல் புகாரை பதிய முடிந்தது!
இந்த நாட்டில், குறைந்தபட்சம் ஒரு களவை பதிவு செய்வதென்பது நேர்மையான அதிகாரிகள் வாய்த்து, நம் நேரம் சாதகமாய் இருந்தால் மட்டுமே நடக்கும்போது, கட்சிகளின் உறுப்பினர்கள், அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் ஏற்படும் பாதிப்பை எந்த பின்புலமும் இல்லாத, பண வசதியில்லாத ஒரு சாதாரண குடிமகனால் புகார் கொடுக்கப்பட்டு அது அவ்வளவு சுலபத்தில் பதியபட்டு, பின் அந்தச்
சாதாரண குடிமகன் சுதந்திரமாய் உலவிட முடியுமா?

ஒரு டிராபிக் ராமசாமி மட்டுமே இருக்கிறார், அவரும் எல்லாம் இழந்தே போராடுகிறார், வியாபம் வழக்கில் சாட்சிகள் எல்லாம் மர்மமாய் செத்துக்கொண்டிருக்க, இங்க ஒழிக என்ற கோஷத்திற்கே அத்தனை இன்னல்களையும் ஒரு பெண் சந்திக்க வேண்டியிருக்கிறது, மிரட்டல், கஞ்சா, பொய் வழக்கு என்று எத்தனையோ இருக்கிறது திணிக்க, இல்லையென்றால் தூத்துக்குடியில் உபயோகித்த ஸ்னைப்பர்கள் இருக்கிறது!
எந்த ஆட்சி என்றாலும் கட்சிக்கூட்டங்களில், விழாக்களில் சாலைகள் திணறும், எந்தச் சாதி விழா என்றாலும் சாராயக்கடைகள் பிதுங்கி வழியும், யார் ஆட்சியிலும் கல்விக்கொள்ளை, மணல் கொள்ளைத் தொடரும், எந்தத் தேர்தல் என்றாலும் பணம் விளையாடும், 130 கோடி மக்கள் சில நூறு ரூபாய்களுக்கோ, வன்முறைகளுக்கோ பலியாகும்போது, சில நூறு அரசியல்வாதிகள் அரசர்களைப் போல அரசிகளைப் போல சர்வாதிகரமாய் நடக்கத்தானே செய்வார்கள்?

ஒரு காலத்தில் மலேசியா இல்லையென்றால் நாங்கள் இல்லை என்று நினைத்த சிங்கப்பூரை போல், லஞ்சமில்லாமல் ஆட்சியில்லை என்று இந்திய மக்கள் நம்புகிறார்கள், இந்த பயமோ, எதிர்மறை நம்பிக்கையோ உடையும் வரை, யார் வேண்டுமானாலும் வன்முறை செய்வார்கள், திரணியில்லாத குடிமக்கள் குனிந்தே இருக்கவேண்டும், எல்லோராலும் மல்லையாக்களாகவும், லலித் மோடிகளாகவும் பறந்துவிட முடியாது இல்லையா?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!