Thursday, 16 May 2019

அறிவிருக்கா? கேள்வியின் அபத்தம்

கல்பாக்கத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் பள்ளி விட்டு மற்ற பிள்ளைகளுடன் ஆட்டோவில் செல்கையில், ஆட்டோ ஒரு திருப்பத்தில் பள்ளத்தில் இருந்து குலுங்கியதில், தலை வெளியே நீள, எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து தலையில் உரச, சிறுவன் மரணமடைந்திருக்கிறான், என்னதான் இத்தனை விளக்கமாய் ஆட்டோ குலுங்கியது, தலை வெளியில் நீண்டது என்று எழுதினாலும், அளவுக்கதிகமாய் ஆட்டோவில் வேனில் பிள்ளைகளை அவர்களது பைகளை திணித்து, ஓட்டுனரின் இருபக்கமும் பிள்ளைகளை அமர வைத்து செல்லும் ஆட்டோக்கள் சர்வ சாதாரணம் சென்னையில், இருபக்கமும் எந்த பாதுகாப்பு தடுப்புக்கம்பிகளும் கூட இல்லாமல், உறங்கிக்கொண்டே சாய்ந்தபடி செல்லும் ஆட்டோக்களும் கூட சகஜம்! 

அரசுக்கு கவலையில்லை, அவர்களுக்கு தன்னலம் மீறி எதுவும் பெரிதில்லை, பார்க்கும் காவல்துறைக்கு கவலையில்லை, அது அவர்களுக்கு “தேவையில்லாத” வேலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கவலையில்லை, ஏனேனில் அது அவர்கள் பிள்ளையில்லை, “எத்தனை” திணிக்கறார்களோ அத்தனை பணம், ஆனால் பெற்றவர்கள் எப்படி இப்படி பிள்ளைகளின் உயிர் மீது இத்தனை அலட்சியமாய் இருக்கிறார்கள் என்பதே கவலையைத் தருகிறது!

பேருந்துகளின் தரத்தை சோதிக்க, ஒரு பிள்ளை பேருந்து ஓட்டையில் விழுந்து சாக வேண்டியிருந்தது, மின்தூக்கிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒரு பிள்ளை அதில் சிக்கி சாக வேண்டியிருந்தது, பள்ளியின் பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்ய பல மழலைகள் பள்ளி தீ விபத்தில் சாக வேண்டியிருந்தது, பள்ளியின் கவனக்குறைவை சுட்டிக்காட்ட ஒரு பிள்ளை நீச்சல் குளத்தில் சாக வேண்டியிருந்தது, மருந்தில், உணவில் உள்ள போலிகளை, சுற்றுப்புறத்தில் உள்ள மாசுகளை, மாசுபடும் சுற்றுப்புறத்தில் வரும் வியாதிகளை சுட்டிக்காட்ட பல பிள்ளைகள் இன்று புற்றுநோயால், ஈரல் வீக்கத்தால், விஷத்தால் சாக வேண்டியிருக்கிறது, இப்படி இந்த நாட்டில் உள்ள பல்வேறு ஓட்டைகளை சுட்டிக்காட்ட உயிர்கள் தேவைப்படுகிறது, அது அதிகார மையத்தை அசைப்பதில்லை, கரன்சி வாசனையும், ஓட்டுக்களும் காலப்போக்கில் இந்த மரண வாசனைகளை, ஓட்டைகளை நீர்த்துப்போகச் செய்கிறது, செய்யும்!

நேற்று அலுவலகத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருக்க, சர்ரென்று ஒரு பைக்கில் மூன்று இளைஞர்கள் ஒருவரையொருவர் நெருக்கி அமர்ந்துக்கொண்டு, சர்வீஸ் லேனில் இருந்து பிரதான சாலையின் நடுவே பின்னே வரும் வாகனங்களை கவனிக்காமல் வேகமாக வந்தார்கள், ஒருவர் தலையிலும் ஹெல்மெட் இல்லை, வேகமாக கியர் மாற்றி, ஏறக்குறைய ப்ரேக்கின் மேல் முழு அழுத்தத்தையும் தர, எல்லா வாகனங்களும் அப்படியே ஸ்தம்பிக்க, தரையோடு தேய்த்துக்கொண்டு அத்தனை வேகத்தில் திரும்பிய அவர்கள் மயிரிழையில் உயிர்தப்ப, இந்த முறை விடக்கூடாதென்று எண்ணி, அவர்களை முந்தி, ஓரம் கட்டி, “ஏய் அறிவிருக்கா, ச்சை!” என்று விட்டு நகர்ந்தேன், “அறிவிருக்கா?” என்ற கேள்வியே அபத்தம்தானே, எல்லா மட்டத்திலும் சரியான அறிவும் மனிதமும் இருந்தால் இதெல்லாம் நடக்குமா என்ன?!

#Auto #ChennaiTraffic #TN

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!