Thursday 16 May 2019

சட்டென்று மாறிடும் வானிலை

பெருமழையாய்
பெய்யும்போது
முகஞ்சுளிக்கிறாய்
வறுத்தெடுக்கும் கோடையில்
பெய்யேன் என்று
மேகமற்ற வானத்தில்
தனியே இறைஞ்சுகிறாய்

உன் கிணறும்
வாய்க்காலும் வழிந்தோடினால்
போதுமென்கிறாய்
அறுவடை முடித்ததும்
எதற்கிந்த மழையென்கிறாய்

பலகீனமான பொழுதில்
கூட்டிற்குள் முடங்குகிறாய்
வெளியே உலவும் பொழுதில்
குடைக்குள் பதுங்குகிறாய்

விரும்பும் போது வா
அதுவரை விலகென்று
உன் இயல்பு நிறுவுகிறாய்
பெருமழையின் கருணையினை
மொத்தமும் மறக்கிறாய்

பச்சை வளர்த்த காடுகளை
மெதுவாய் அழிக்கிறாய்
பொட்டல்வெளியில் நின்றுக்கொண்டு
மண்ணோடு உறவாட அழைக்கிறாய்

ஈரம் எல்லாம்
காடு வளர்த்த கருணையில்
வந்ததென்பதை மறக்கிறாய்
உன் மனமாயையில்
மழையை மொத்தமும் எரிக்கிறாய்

மழையாய் நான்
மனிதனாய் நீ
காற்றின் திசைமாற்றி
நான் நெடுந்தூரம் பயணிக்குமுன்
கொஞ்சம் நேசப்பயிர் வளர்த்து
நெஞ்சில் நிறைத்திட
சட்டென்று மாறிடுமே
வானிலை மழைதேசத்தில்!



No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!