Thursday, 16 May 2019

மனித உறவின் அடிப்படை விதிகள்

இந்த ஆசிரிய தினத்தில் தொடர்ந்து கேட்கும் பாலியல் குறித்த புகார்களும், ஆசிரியர் மாணவர்களுக்கான உறவின் விரிசலும், காயப்படுத்தும் செயல்களும், வன்முறைகளும் கொலைகளும் கவலையுறவே செய்கிறது, மாறுபட்ட இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் மாணவர்கள் மட்டுமல்லாது, எல்லா உறவுக்குமான சில அடிப்படை விதிகளை பார்க்கலாம்;

1. Mutual trust and respect: பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும்; இரண்டு பேருக்கான எந்த உறவிலும் முதல் முக்கியமான விஷயம் இது, கணவன் மனைவியாக, காதலராக, பெற்றவர் பிள்ளைகளாக, ஆசிரியர் மாணவர்களாக, நண்பர்களாக யாராய் இருந்தாலும் பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் அவசியம். ஒருவரை மட்டம் தட்டி பேசுவதோ, குறைகளை மிகைப்படுத்துவதோ, useless fellow ஒன்றுக்கும் உதவாதவன் என்று காயப்படுத்துவதோ உறவை சேதப்படுத்தும், மனங்களை பலகீனமாக்கும்! நம்பிக்கைத்தரும் வார்த்தைகளை, “நான் இருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்”, அப்படியில்லையென்றால் உறவிலோ எடுத்துக்கொண்ட பணியிலோ அர்த்தமேயில்லை!
2. Undivided attention - முழுமையான கவனம் அல்லது சிதறாத கவனம்; ஒருவரிடம் பேசும்போது காதுகளை மட்டுமல்ல, கண்களை, மனத்தை, மூளையை எல்லாம் அவரிடம் கொடுக்க வேண்டும், மாணவன் கேள்விக்கேட்கும் போது அதைக் கவனித்து, முழுமையாய் கேட்டு, உள்வாங்கி பதிலுரைத்தல் வேண்டும், அதேபோல் பாடம் நடத்தும்போது மாணவர்களும் முழுக்கவனத்தை சிதறவிடாமல் கேட்க வேண்டும், ஒருவர் பேசும்போது காதுகளை மட்டும் கடன் கொடுத்துவிட்டு, வேறு ஒரு வேலையையோ, அல்லது வேறு சிந்தனையிலோ இருப்பது அந்த மற்றொருவரை காயப்படுத்தும் செயல்!

3. Unbiased approach/ பாராபட்சமில்லாத அணுகுமுறை; கேள்வி ஒன்றை ஒருவர் கேட்கும் போது, மனதுக்குள் ஓடும் வண்டுகளை மொத்தமாய் வெளியேற்றுதல் அவசியம், அவன் என்ன சாதி, அவன் பெற்றோரின் பணி என்ன, மூதாதையர்கள் அறிவாளிகளா, நேற்று முட்டாள்தனமாய் கேட்டது போலோ? அல்லது சாதி,மதம், பொருளாதாரம் போன்ற வண்டுகளை ஒதுக்கிவிட்டு, ஒருவரையொருவர் அல்லது ஒரு விஷயத்தை அணுகுதல் சிறந்த முடிவுகளைத் தரும்.

4. Unclog pre-conceived notion: ஒருதலைப்பட்சமான முன்முடிவுகளை அகற்றுதல்; கணக்கில் அந்த மாணவன் சரியாய் மதிப்பெண் எடுக்கவில்லை என்பதால் அவன் முட்டாள் என்ற வரையறைக்குள் ஒருவரை நாம் எளிதாக கொண்டுவந்துவிடுகிறோம், அல்லது ஒருமுறை தோற்றுவிட்டால் மறுமுறை வாய்ப்பில்லை என்று மறுக்கிறோம் அல்லது தோல்விக்கான மொத்த காரணியும் திறமையின்மையே என்று மற்றவர்களுக்கான முன்முடிவுகளை நாமே எடுத்துவிடுகிறோம். இங்கே நிரந்தர வெற்றியாளனும் இல்லை, தோல்வியாளனும் இல்லை, ஒரு விஷயத்தை, செய்தியை முழுதாய் தெரிந்துக்கொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்டு ஒரு சார்பாய் பேசுதலும் pre conceived notion தான், இங்கே குற்றச் செய்திகளில் பெண் பெயர் அடிப்பட்டால் பெண்ணின் ஒழுக்கம், கற்பு, ஆடை, இத்யாதி இத்யாதி என்று கடவுளின் அரிதாரம் எடுத்து சேற்றை வாரி இறைப்பதெல்லாம் பெண்களின் மீதான ஒரு ஆதித அடக்குமுறை மனோபாவத்திலான தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து வரும் ஒரு தலைப்பட்சமான முன்முடிவுகளின் மாதிரிகள்தான்!

5. Intelligence and inspiration are not inherited, புத்திசாலித்தனமும் உத்வேகமும் பரம்பரை சொத்தல்ல; ஒருவரின் புத்திசாலித்தனத்தை, அவரின் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் அவருடைய குலத்துக்கே உரியது என்பதை விட்டு வெளியில் வந்து, வளர்ப்பின் முறையிலும், வழிகாட்டுதலின் முறையில், சமூகச்சூழலின் முறையிலுமே வருகிறது என்பதை உணர்தல் வேண்டும், அப்பன் ஒன்றையும் பிள்ளை அதையோ மற்றொன்றையோ செய்வதற்கு காரணம் இதுவே, வாய்ப்புகளும் வழிகாட்டுதல்களும், சுய உத்வேகமும் இருக்கையில் வெற்றி எளிதாகும், இந்த அடிப்படை உண்மையை உணராமல் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டியிருந்தால் முன்னேற்றம் இல்லை!

6. Accept failures and celebrate, தோல்விகளை ஒத்துக்கொண்டு அதைக்கொண்டாடுங்கள்; இது முட்டாள்தனமாய் உங்களுக்கு தெரியும், தோல்வியை ஏன் கொண்டாட வேண்டும், கொண்டாடுதல் என்பது ஆனந்தப்பட்டு தேங்கிவிடுவதல்ல, அலசி ஆராய்ந்து அடுத்த அடிக்கு முன்னேறி செல்வது. விமானம் கண்டுபிடித்த வரைட் பிரதர்ஸ், மின்சார பல்பு கண்டுபிடித்த எடிசன் என்று அன்று தொட்டு இன்றுவரை எல்லா கண்டுபிடிப்புகளும் முதலில் தோல்வியைத்தான் தந்தது, எத்தனை விதமாய் தோற்கலாம் என்பதையே ஆராய்ச்சி செய்வதற்கு உதாரணம்தான் கார்களின் தரப் பரிசோதனைகள், தோல்விகளை சந்தித்து அல்லது கண்டறிந்து, ஆராய்ந்து அதிலிருந்து வெற்றிக்கு வழிவகுப்பதுமே நடைமுறை, அதனால் தோல்வியை காரணமாக்கி யாரையும் காயப்படுத்தாதீர்கள்!

7. Charity is humanity; தொண்டென்பது மனிதம்; படிக்கும் பிள்ளைகளுக்கு சிறு உதவிகள் செய்வது, ஆசிரியர்களுக்கு உதவி செய்வது, உறவுகளுக்கிடையே கொடுத்துதவுவது எல்லாம் மனித இயல்பு, அந்த இயல்பு மட்டுமே இந்தப் பூமியை சுழன்றுக்கொண்டிருக்கச் செய்கிறது!

8. Uncertainty is certain: நிலையில்லாதது என்பதே உறுதியான நிலைப்பாடு; துளி கூட நிரந்தரம் இல்லாதது இங்கு எந்த நிலையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மந்திரியாய் இருப்பவன் பிச்சைக்காரனாகலாம், பிச்சைக்காரன் மந்திரியாகலாம், நன்றாக சம்பாதித்த துணை சம்பாதிக்க முடியாமல் போகலாம், இப்படி எத்தனையோ, எது எப்படி இருந்தாலும் அந்தந்த நிலையை எதிர்கொள்வதற்கும் கடப்பதற்கும் தன்னம்பிக்கையை, ஆறுதலை, உதவியை ஒருவர் தரும்போது அங்கே எந்த உறவிலும் விரிசல் ஏற்படுவதில்லை!
நலம்!!!❤️
#Teachersday #Relationship

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!