Thursday, 16 May 2019

பொதுநல_வழக்குகள்

தமிழ்நாடு முழுக்க பேனர்கள் வைக்கத்தடை, டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு! நேற்று இந்த வழக்குத்தொடர்பான செய்தியில், எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதிகாரிகள் மெத்தனமாய் செயல்படுவதற்கும் கண்டனம் தெரிவித்து இருந்தனர், இன்னொரு வழக்கில் கிட்டதட்ட 86 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தே ஒரே காரணத்துக்காக முடித்துவைக்கப்பட்டதையும் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது, இப்படி நாட்டில் குப்பைகள் தேங்குவதில் இருந்து, சாலைகளின் கட்டமைப்புத் தொடங்கி குழந்தைகள் கடத்தல் வரை, வழக்குகள் வழக்குகள் அத்தனை #பொதுநல_வழக்குகள்!

இத்தனை முக்கிய வழக்குகளில் இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம், சாலை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகள், மற்றும் குழந்தைகள் கடத்தல்!
டிராபிக் ராமசாமி என்ற ஒற்றை மனிதரின் பங்களிப்பும் எஞ்சியிருக்கும் நேர்மையான அதிகாரிகளாலும், நீதிமன்றங்களாலுமே இன்றைக்கு சில சாலைகள் சாலைகளாக இருக்கிறது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, லெட்டர் பேட் கட்சி, என்று எத்தக்கட்சியாய் இருந்தாலும் நடைபாதைகள், மரங்கள், குடியிருப்புகள், பொது வாகனங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனை பேனர்கள் - விளம்பரப்பதாகைகள், அத்தனையையும் வைத்துவிட்டு, போக்குவரத்தை நிறுத்திவிட்டு, இந்தக் கட்சிகளின் வாகனங்கள் பறந்துவிடும், ஆனால் அதன் பின், போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கிக்கொள்வார்கள், விபத்துகள் நேரிடும், விபத்தின் வழக்குகள் விபத்தாக முடித்துவைக்கப்படுமேயன்றி, ஒருநாளும் மோசமான சாலைகளுக்காக, நேர்மையற்ற கட்டமைப்புகளுக்காக இந்த அரசையோ அதிகாரிகளையோ தண்டித்ததேயில்லை!

ஒரு சாதரண இளைஞன் தலையில் தலைக்கவசம் அணியாமல் சாலையில் பறப்பதற்கும், பல வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சாலையில் சட்டத்தைப்பற்றிய பயமும் விழிப்புணர்வும், பொதுநலச்சிந்தனையும் இல்லாமல் நாள்தோறும் விபத்துகளை ஏற்படுத்துவதற்கு எது காரணம், நடைபாதைகள் முழுக்க பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்கள் கடைகளை விரிவுபடுத்தியும், நடைபாதைகளை, சாலையோரங்களை நிரந்தர கடைகளாகவும், ஒழுங்கற்ற வாகன நிறுத்தங்களாகவும் மாற்றியதற்கு யார் காரணம்? தீ விபத்துகள் நேர்ந்தால் தப்பிக்க வசதியின்றி இயங்கும் பள்ளிகளும், கல்வி நிலையங்களும், அலுவலகங்களும் இன்று ஏராளம், அனுமதியின்றி முறையான தரச்சான்றுகள் இன்றி சாலையில் விரையும் வாகனங்கள் ஏராளம், அதனால் உயிர்பலிகளும் ஏராளம்!

ஒரு டிராபிக் ராமசாமியும் ஒரு உயர்நீதிமன்றமும் இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது, மக்கள் சுயநலம் மிகுந்து பெருத்துவிட்டார்கள், தங்கள் உயிரையோ பிற உயிர்களைப்பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை, வதவதவென இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றியும் தங்களால் ஏற்படும் சிரமங்களை அதைத்தொடர்ந்து ஏற்படும் விபத்துகளைப்பற்றியோ வியாபாரிகளுக்கு கவலையில்லை, பேருந்தில் உயிரோடு வைத்து எரித்தாலும் சில பல வருடங்களில் வெளியே வந்துவிடலாம், பணமோ கட்சியோ இருக்கிறது காப்பாற்ற!

இதற்கென தற்காலிக தீர்வுகள் என்பது, நீதிமன்றங்களும் டிராபிக் ராமசாமிகளும் மட்டும்தான், நிரந்தர தீர்வு வேண்டுமென்றால், அமைச்சர்களுக்கும், கட்சிகளுக்கும் கட்டுப்படாத அதிகாரம் மிக்க அமைப்பு ஒன்று வேண்டும், இனி எந்த வாகனங்களிலும் கட்சிக்கொடிகளே இருக்கக்கூடாது என்றும், ஆம்புலன்ஸை தவிர்த்து யாருடைய வாகனங்களுக்காகவும், அது ஆள்பவரே என்றாலும் போக்குவரத்து நிறுத்தப்படக்கூடாது என்றும் சட்டம் இயற்றி அதை அமல்படுத்த வேண்டும், நாடு முழுக்க கண்காணிப்பு கருவிகள் நிறுவ வேண்டும், போக்குவரத்து நிறுத்தப்படாது என்றால் மட்டுமே இந்த கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக அனுமதித்த ஆக்கிரமிப்புகள் புரியும், சாலையில் சிக்கி, விபத்துகள் நேரிடும் போதே கட்டமைப்பின் கோளாறுகள் புரியும், சுங்கக்கட்டணங்கள் இவர்களும் செலுத்தவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தால் மட்டுமே அதன் கொள்ளைகள் புரியும் (ஒரு பகுதி வருமானம் இங்கேயும் போகும் என்பதால் இதை எளிதாக கடந்துவிடலாம்) இவர்கள் பெருத்த சுயநலவாதிகள் என்பதால் அவர்களுக்காக சாலைகளையும் கட்டமைப்புகளையும் சீரமைப்பார்கள்!

இது போலவே குழந்தைகள் கடத்தலும், இந்தச் சாலை விதிமுறைகளையும், வாகன கண்காணிப்பையும், நேர்மையான அமைப்பையும், தலையீடற்ற அதிகாரத்தையும் செயல்படுத்தினால், கடத்தல்களை கண்காணிக்கவும் தடுக்கவும் முடியும், நாள்தோறும் வடக்கில் இருந்து தெற்கிற்கு நகர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் மனிதர்களை கண்காணித்து கட்டுப்படுத்தி, சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பவர்களை மீட்டெடுத்து குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு வலுவான சட்டத்தையும் அமல்படுத்தும் வரை இதுவும் தொடரும், எத்தனையோ சிக்னல்களில் குழந்தைகள் பிச்சையெடுக்கும், சாலைகளை மட்டும்தான் பார்க்கும் போக்குவரத்துத்துறை, மாற்றப்படி அவர்களுக்கு, அவர்களை அப்புறப்படுத்தும், குழந்தைகளை மீட்டெடுக்கும் அதிகாரம் இல்லை, இல்லாமல் இருக்கலாம் அல்லது குற்றத்தில் மறைமுக பங்கும் இருக்கலாம், கண்முன்னே நிகழும் குற்றங்களுக்கு நாமும் ஒரு மறைமுக சாட்சிதானே?

ஓட்டுப்போட்டு ஆட்சி அதிகாரத்தை ஒரு சாராரிடம் கொடுத்துவிட்டு, நாட்டில் குப்பையை அகற்றுவதில் இருந்து, காற்று மாசை ஏற்படுத்தும் ஆலைகள் முடக்குவது வரை நீதிமன்றங்களையே நாட வேண்டியிருக்கிறது, வழக்குகள் மூலமே நாட்டில் மாற்றம் நடக்குமென்றால், தகுதியற்ற ஆட்சியாளர்களை, இந்த வழக்குகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் கொண்டு மக்களே கலைக்கும் அதிகாரத்தை கொடுக்கும் ஒரு சட்டம் வேண்டும், அதுவரை பொதுநல வழக்குகளும் நீதிமன்றங்களுமே துணை! 😓
#Public_Litigation #Judiciary #Traffic_Ramasamy #டிராபிக்_ராமசாமி

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!