Thursday, 16 May 2019

ஆசிரிய தின வாழ்த்துக்கள்

“நல்லா படிக்கிற பொண்ணை ஏன் நிறுத்தணும்? கட்டணத்தை குறைச்சுகிறோம், என் பையன் புக்ஸைக் கொடுக்கிறேன்!”, ஏழ்மையை காரணம் காட்டி முதன் முதலில் படிப்பை நிறுத்த முயன்ற அம்மாவுக்கு ஒரு ஆசிரியை சொன்னது, அந்த ஆசிரியைத் தொடங்கி இன்று வரை எத்தனையோ ஆசிரியர்களை, பேராசிரியர்களை, மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்களை சந்தித்துவிட்டேன், நானே ஒரு ஆசிரியையாக, பயிற்சியாளராக பணிபுரிந்தும் இருக்கிறேன்!
“எது விதைக்கப்படுகிறதோ அதையே அறுவடை செய்ய முடியும்!” என்பதற்கிணங்க, பிறருக்கு நன்மை செய்த அத்தனை செயல்பாட்டிற்கு வலுவான அடித்தளம் அமைத்தது நான்கு பேர்கள், பெற்றவர்கள், ஆசிரியர்கள், புத்தகங்கள் மற்றும் அனுபவங்கள், அனுபவமும் கூட சிறந்த ஆசான்தானே! 

“ஏன், எதற்கு, எப்படி?” என்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இரு, இந்தத் தேடல் நின்றுவிட்டால் கற்பது நின்றுவிடும் என்று சொன்னவர் அப்பா, “தெரியாது என்றால் முடிவல்ல, தெரியாது என்பது பிழையுமல்ல, தெரியாது என்பதை தெரியாது என்று சொல்லி, தெரிந்துக்கொள்ள தொடங்குவதே கற்றல்!” என்று ஊக்கப்படுத்தியவர்கள் ஆசிரியர்களும் சில நண்பர்களும்! படிப்பில் என்றில்லாமல், என்னுடைய பள்ளி இறுதியாண்டில், என்னுடைய கணிப்பொறி ஆசிரியர் (ஆமாம் ஆசிரியை அல்ல) மகள் என்றும் மகன் என்றும் எங்களை கொண்டாடி, சமூகத்தை எதிர்கொள்ளும் போது தன்னுடைய நடை உடை பாவனைகளில் உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்று, எங்களுக்கு அழகாய் ஆடைகளை எப்படி தேர்ந்தெடுப்பது, எப்படி எங்களை அழகாகவும் தன்னம்பிக்கையோடும் நிமிர்வோடும் செதுக்கிக்கொள்வது என்று எங்களை வடிவமைத்தவரும் அவரே! அதே நேரத்தில், “உங்க பொண்ணுக்கு நிறைய boy friends” என்று என் அம்மாவிடம் tom boy போல் சுற்றிக்கொண்டிருந்ததை சுட்டிக் காட்டியவரும் அவரே 😜

“இது என்ன க்ளிப், எதுக்கு மூடி முகத்துக்கு நேரே?” என்று மாணவிகளிடமும், “டேய் இப்படி ஓரமா வா, மூடி வெட்டச் சொன்னேன் இல்ல, ஏன் வெட்டல?” என்று மாணவர்களை பிடித்து நிறுத்தி, அவர்களுக்கு அங்கேயே ரப்பர் பாண்டை வைத்து உச்சியில் ஒரு குடுமி இட்டு, “ஸ்கூல் முடியற வரைக்கும் நீ இப்படித்தான் இருக்கணும்!” என்று பள்ளியிறுதியாண்டின் மாணவர்களுக்கு நூதன தண்டனைகள் கொடுத்து, “சாப்பிட்டியா, என்ன ஆச்சு, சரி வா என் சாப்பாட்டை சாப்பிடு!” என்று அன்னையை போல் அக்கறை காட்டி, “ஏன் முடியாது? மனசு வெச்சா எல்லாம் முடியும்!” என்று எங்களை ஊக்கப்படுத்தி வழிநடத்திய அத்தனை ஆசிரியர்களையும், ஆசிரியைகளையும் நினைவு கூர்கிறேன், அத்தனை பேருக்கும் ஆசிரிய தின நல்வாழ்த்துகள்!
என் கருத்தில், எழுத்தில் உள்ள நிறைகுறைகளை தம் நேரத்தை எனக்காக ஒதுக்கி சுட்டிக்காட்டும் நண்பர்களுக்கும் ஆசிரிய தின நல்வாழ்த்துகள், வாழ்க்கையில் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் காரணமாய் அமைந்து அனுபவங்களின் மூலம் பாடம் கற்க வைத்த அத்தனை மனிதர்களுக்கும் ஆசிரிய தின வாழ்த்துகள்!
Gratitude is an attitude!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!