Thursday, 16 May 2019

நீங்கள் தற்கொலைச் செய்துக்கொள்ளலாம்!

போன வாரத்தில் ஒருநாள் ஓஎம்ஆர் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் பைக் விழுந்துக்கிடந்தது, போக்குவரத்துத்துறையும், கும்பலும் கூடியிருக்க, வெள்ளைச்சட்டையில் ஒருவர் தரையில் கிடந்தார், விழுந்த நிலையைப்பார்த்தப்போது அனேகமாய் இறந்திருப்பார் என்றே தோன்றியது, நேற்றும் அதே சாலையின் ஓரத்தில் நின்றிருந்த நாயை வேகமாய் வந்த பைக் மோத, நாயும் அந்த இடத்திலேயே மரணம்!
ஓஎம்ஆர் வழியே வரும் போது டைடல் பார்க்கின் முந்தைய சிக்னலில் சரியான சிக்னலில் முன்னே சென்ற பேருந்தையும் பைக்கையும், சாலையின் இடதுபுறத்திசையில் இருந்தே குறுக்கே பாய்ந்த பைக் மோத, மோதிய வேகத்தில் இரண்டு பைக்குகளும் பேருந்தில் சாய, நல்லவேளையாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட, ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!

விபத்துகள் தாண்டி சாலைவிதிகளின் மீதான மெத்தனத்தை காண நீங்கள் சென்னையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். மயிலாப்பூரில் இருந்து மந்தைவெளி செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றி பல வருடங்கள் ஆகிறது, எனினும் நேர் எதிரே வரும் வாகனங்கள் அதிகம், அதே போல் இசபெல்லா மருத்துவமனையின் சாலையும் ஒருவழிப்பாதையில், தவறான பாதையில் நேர் எதிரே வருபவர்கள் கொஞ்சம் கூட சளைக்காமல் ஹாரன் அடிப்பார்கள், உங்களை முறைப்பார்கள், இது என் அப்பன் வீட்டுச்சாலை என்றே பறப்பார்கள்!

அப்படியே அடையார் தொட்டு, மத்திய கைலாஷ் திரும்பினால், திரும்பும் போது, வேகமாக நேர் எதிரே வாகனங்கள் திரும்பும், அந்தச் சாலையைத் தடுத்து, மத்திய கைலாஷின் மறுபுறம் இருந்து வரும் வாகனங்கள் யு டர்ன் எடுத்து மீண்டும் மத்தியக்கைலாஷ் செல்ல இரும்பு தடுப்பு அமைத்திருப்பார்கள், அதில் வலது, இடது திரும்பாதீர்கள் என்று போக்குவரத்து எச்சரிக்கை இருக்கும், மக்கள் அதை வலது இடது திரும்பவே உபயோகிப்பார்கள்!

இதற்கிடையில் “மெத்தப்படித்த” ஐடி ஊழியர்கள் 90 சதவீதம் பேர் பாமரர்களோடு அந்தச்சாலைகளில் நடைமேம்பாலத்தைத் தவிர்த்து, ஸீப்ரா க்ராஸிங்கை தவிர்த்து நினைத்த இடத்தில் எகிறிக்குதித்து வாகன ஓட்டிகளுக்கு பீதியைக் கிளப்புவார்கள்!

சமீபத்தில் இந்திய இரயில்வேயின் மெட்ரோ திட்டத்துக்காக தரமணி சாலைத்தொடங்கி சோழிங்கநல்லூர் நோக்கி, சாலையில் மண்பரிசோதனை செய்கிறார்கள், ஒவ்வொரு இடமாய் பள்ளம் தோண்டி பின்பு அரைகுறையுமாய் மூடிவிட்டுச்சென்று விட, அதுவே பல இருசக்கர வாகனங்களுக்கு மரணப்பள்ளமாய் மாறிவிடுகிறது! சுங்கக்கொள்ளை மட்டும் ஓட்டைச் சாலைகளுக்குத் தொடர்கிறது!

இவையெல்லாம் சில உதாரணங்களே, சென்னை முழுக்க சில இடங்களில் போக்குவரத்து காவல்துறை “இருக்கிறது” மற்றபடி இல்லை, பல இடங்களில் இல்லவே இல்லை! இந்த டிசம்பரின் ஞாயிற்றுக்கிழமையில் கட்சி அலுவலகத்துக்கு இன்றைய முதல்வர் வர, சென்னையில் இருக்கும் மொத்த காவல்துறையும், போக்குவரத்து காவல்துறை உட்பட களத்தில், இத்தனை பேர்கள் ஒரு இடத்தில் குவிந்திருக்க, விஜபிகளின் பாதுகாப்புக்கே எல்லாம் சென்று விட்டால், மக்களுக்காக இவர்களை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?
ஆள்பவர்களுக்கு சாலையைப்பற்றி கவலையில்லை, அவர்களுக்காக சாலை ஸ்தம்பிக்கும், அப்படியும் இல்லையென்றால் அவர்கள் சொந்த விமானத்தில் கூட பறக்கலாம், சாதாரண மக்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை, குறைந்தபட்சக் கட்டமைப்பை கூட எதிர்பார்க்காமல், நாம் சுங்கக்கட்டணம் கட்டிக்கொண்டிருக்கிறோம், தினந்தோறும் விபத்துகளை பார்த்தும் இன்னமும் தலைக்கவசம் அணியாமல் விதிகளை மதிக்காமல் பறக்கிறோம், நம்மால் பிற உயிர்கள் பறிக்கப்படும் என்று தெரிந்தும் திமிராய் இயங்குகிறோம், இந்த பெரும் அலட்சியமான போக்கு கொண்ட மக்களுக்கு, பொறுப்பான அதிகாரிகளும், அமைச்சர்களும் எப்படி வாய்ப்பார்கள்?

உதவாத அரசு எந்திரத்தை பழுதுபார்க்க முடியவில்லையென்றாலும், ஒவ்வொருவரும்
சாலை விதிகளை பின்பற்றி முன்னுதாரணமாய் மாறலாம் இல்லையா?
பிறருக்கு உதவிசெய்வது மட்டும் தானமல்ல, பிற உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் சாலையில் நிதானத்துடனும் விவேகத்துடனும் செல்வதும் பெரும் தானம்தான், ஒருவேளை விதிகளை மதிப்பதும், பிற உயிர்களின் மீதும் உங்கள் உயிரின் மீதும் அக்கறையில்லையென்றால், நீங்கள் தற்கொலைச் செய்துக்கொள்ளலாம்!
#Roadsafety #Traffic_Violation #Chennai

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!