Thursday, 16 May 2019

நிவாரணம் எனும் விலை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் எது நடந்தாலும், அரசுக்கு தெரிந்தது எல்லாம் “நிவாரணம்” மற்றும் “விசாரணைக்கமிஷன்” (இது நடக்கும் வேகத்துக்கு, இதெல்லாம் “உலகிலேயே மெதுவான விசாரணை” என்று கின்னஸ் புத்தகத்தில் வந்திருக்க வேண்டும்). “எங்கப்பா எனக்கு நிறைய சொத்து சேத்து வச்சிட்டு போயிருக்கார், அதனால நான் இஷ்டத்துக்கு செலவு செய்வேன்” என்பது போல, “இந்த ஜனங்ககிட்ட நிறைய வரிப்பிடுங்குறோம், சாராயத்தாலும் நிறைய வருது, எவன் செத்தா என்ன, நிவாரணம் கொடுத்தா போச்சு” என்ற ரீதியில் இயங்குகிறார்கள்! 

சென்னையில் எல்லா வகையிலும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கட்டிடம் இடிந்து பல உயிர்கள் போனது, பலரின் வீடு என்ற கனவு சிதைந்து, கடனாளியானார்கள், நீர் மேலாண்மையின் அலட்சியத்தில் எப்போதும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர், அலட்சியான நிர்வாகத்தால் பல்வேறு விபத்துகள் சாலையில், கட்டிடங்களின் வரைமுறை கோளாறுகளில் ஏரிகளும் குளங்களும் மாயமாய் மறைந்துக்கொண்டிருக்கிறது, தீ விபத்துகள், பள்ளிச்சார்ந்த விபத்துகள் என்று எதிலும் ஏதோ முதலாளிகளின் மெத்தனமும் அதற்கு அரசு அதிகாரிகளின் ஆதரவும் நிச்சயம் இருக்கும், “சாலையில் விளம்பரப்பலகைகளை வைக்கக்கூடாது என்று உங்களுக்கு நாங்கள் எத்தனை முறை சொல்வது?” என்று உயர்நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு அரசின் இயக்கம் இருக்கிறது!

சமீபத்தில் அரசுத்துறையில் இருக்கும் நண்பர், மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகளைப்பற்றி யோசித்துப்பார் என்று அதில் நடக்கும் ஊழல்களை சுட்டிக்காட்டினார், இப்போது நடந்திருக்கும் எச்ஐவி இரத்தம் ஏற்றியக்கொடுமை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது, வராதது இன்னும் எத்தனை என்பதை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர யார் அறிவார்?
“தவறுக்கு அடிப்படைக் காரணிகளான லஞ்சத்தையும், தகுதியற்ற அதிகாரிகளையும், அலுவலர்களையும், நேர்மையற்ற நிர்வாகத்தையும் சீர்செய்யாதவரை இதற்கெல்லாம் தீர்வில்லை!” அதுவரை இதுபோன்ற அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள பழகவேண்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!