Thursday, 16 May 2019

நாட்குறிப்பின் கடைசிப்பக்கத்தில்

ஒவ்வொன்றாய்
விதி மறுக்க
கிடைத்ததை வரமாய்
மாற்றிக்கொண்டு
புன்னகைக்க
குழப்பமடைந்தான்
கடவுள்!
வேண்டுவது ஏதுமின்றி
நகர்ந்துச் செல்ல
கேளென்று வேதனைக்கூட்டி
துரத்தினான்
நெடுநேரம் முன் நின்று
வேதனைகளை சீர்தூக்கி
சலனமற்று நோக்கி
எண்ணியெண்ணி
ஒருநாள் வரமொன்று கேட்க
வெற்றியடைந்த களிப்பில்
ஈயேனென்று
இகழ்ந்துரைத்தான்!
பட்டென்று
விட்டுப்போன மனதில்
வெளிச்சம் சூழ
இனி வேண்டுவது
ஏதுமில்லை
தருவது உண்டென
தானுரைக்க
யோசித்து
அவன் நின்ற வேளையில்
“யாசித்தலின் இழிநிலைக்கு
எனை துரத்தி
பின்னரும் மறுத்து
இகழ்ந்துரைத்தலின் பாவங்கள்
உனை சூழாதிருக்க
வரமொன்று தருகிறேன்
நீ எப்போதும் கடவுளாய்
நிம்மதியாய் வீற்றிரு!”
என்று விலகி வந்தேன்
கடவுள்
திமிர்பிடித்தவளின்
வரத்தில்
வாழத்தொடங்கினான்!!

#நாட்குறிப்பின்_கடைசிப்பக்கத்தில்!



No photo description available.

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!