Thursday, 16 May 2019

ஒப்பாரி வைப்பதை விட வேறு எதுவும் நிகழாது!

மனது ஆறவில்லை, 13 வயது சிறுமியை தலையைத் துண்டித்துக் கொல்ல எப்படிப்பட்ட கொடூர மனம் வேண்டியிருக்கும்? அதுவும் அவனின்
குடும்பத்தினர் அந்தக் கொடூரத்திற்கு பிறகும்
அவனை காப்பாற்ற நினைப்பதை கேட்கும் போது, மனிதநேயம் அற்ற கொலைக்கார குடும்பம் என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது?
நிர்பயா, சுவாதி, ஹாசினி, விஷ்ணுப்பிரியா, அனிதா, நந்தினி, ஹாசீபா என்று எத்தனை பேர்? முடிவேயில்லாமல் நீள்கிறதே பட்டியல்? பாலியல் பலாத்காரம், போர், பகை, கொடுக்கல் வாங்கல் தகராறு, சாதிய வன்மம், மத வெறி, ஒருதலைக்காதல், காதல் தோல்வி, ஒழுக்க விதிகள், நீட், விரக்தி, நரபலி, மனநிலை பாதிப்பு என்று எத்தனை எத்தனை காரணங்கள் பெண்களையும் குழந்தைகளையும் புணர்வதற்கும், கொல்வதற்கும் அல்லது தற்கொலை செய்துக்கொண்டு சாவதற்கும்?

நிர்பயாவின் வழக்கின் போதாவது பொதுவெளியில் சரியான தண்டனைக் கொடுத்து, அதை நாடு முழுவதும் பரவலாய் பரப்பி இருந்தால், வஞ்சக மனங்களுக்கு ஒரு பயம் வந்திருக்கும், சுவாதியின் மரணம் மட்டும் அவசரமாய் முடிக்கப்பட்டு ஒரு மர்மமாய் முடிந்துப்போனது, மற்றப்படி வழக்கமான காவல்துறை, நீதிமன்ற காட்சிகள்தான், அதுவும் வசதியுள்ளவன் சிறைக்கே வரமாட்டான், பெண்கள் மீடூ போட்டு மனதை தேற்றிக்கொள்வார்கள், இன்னும் அதிகாரம் நிறைந்தவர்கள் மீடூக்களுக்கு அவசியம் இல்லாமல் சவுக்கியமாய் குடும்பம் நடத்தி பேரன் எடுக்கும் வயதில், பிள்ளைப்பெற்று ரகசியத் தந்தைகள் ஆவார்கள், பிடிபடும் மற்ற எவனும் வாய்தாக்களில் வழக்கொழிந்து போகும்வரை வாழ்ந்துத் தொலைப்பான்கள்!

மரணத்தண்டனை தேவையில்லை என்று
சிலர் கொதிப்பார்கள், பணம் விளையாடும் காட்சிகளில் நிரபராதிகள் கூட தண்டனை பெற்றுவிடக்கூடிய அபாயம் இருப்பதை உணர்ந்த பதைப்பு அது, அல்லது மிகுந்த மனிதநேயத்தில் தானும் தன் குடும்பமும் பலியாகாதவரை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள், உயர்சாதி என்றாலும் கீழ்சாதி என்றாலும் கண்மூடித்தனமாய் ஒரு கும்பல் அறச்சீற்றத்தோடு ஒரு சார்பாய் ஒடி வரும், மதம் என்று ஒரு கும்பல் பிராச்சாரம் செய்து காப்பாற்ற வரும், இப்படியே ஒவ்வொன்றாய் வந்து இந்தக்குற்றங்களை மடைமாற்றி, நினைவுகளை நீர்த்துப்போகச் செய்யும், கொடூர மரணத்தில் தன் மகளை பறிகொடுத்ததுவிட்டு, காலம் முழுக்க பெற்றதையும் வளர்த்ததையும் எண்ணியெண்ணி புத்திர சோகத்தில் பெற்றவர்கள்தான் உருக்குலைந்துப்போவார்கள்!

ஏற்கனவே மோசமான மனநிலையில் வளர்ந்த ஆண் தலைமுறை, எப்படி நியாயமான ஒரு தலைமுறையை வளர்ந்தெடுக்கும்? இனி வளரும் தலைமுறைக்கு என்ன சொல்லி
மாற்றம் கொண்டு வந்து இந்த நிலையைத்தடுக்கும்? பிறக்கும் பிள்ளைகள் குழந்தைகளாகத்தான் பிறக்கிறார்கள், வளர்ப்பும், சேர்க்கையும், சமூகமும் இத்தகைய பிறழதல்களை, மோசமான கொலைகளை அரங்கேற்றி விடுகிறது! சைக்கோக்களை கதாநாயகனா உருவகப்படுத்தும், சாதியை தூக்கிநிறுத்தும் திரைப்படங்களும் தன் பங்கைச் சரியாகவே செய்து இந்த குற்றங்களுக்கு அடித்தளம் அமைத்துத்தருகிறது!

கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவனை, சாதி என்றும், கண்மூடித்தனமான பாசம் என்றும், பணம், பதவி, செல்வாக்கு என்றும் காப்பாற்றிக்கொண்டே வந்தால், அவர்களின் மனநிலையில் என்ன மாற்றம் ஏற்படும், கொஞ்சம் பயமும் தயக்கமும் கொண்டவர்கள் கூட துணிச்சலாய் இதுபோன்ற காரியங்களை செய்யத்தானே தூண்டும்? யார் காப்பாற்றுகிறார்களோ அவர்களையே இந்தக்கொலைகாரர்கள் பதம் பார்ப்பார்கள் என்ற உண்மையும் ஹாசினியின் கொலைகாரனிடம் உறுதியாகியிருக்கிறதுதானே?

இந்தச் சமூக அமைப்பு மாறாத வரை, நீதியற்ற, பணம் சார்ந்த, சாதிய வக்கிரங்கள் நிறைந்த மனிதர்கள் உள்ளவரை, இந்தக் கொலைகள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கும், நாளை நம் வீட்டில் நடந்தாலும், ஒப்பாரி வைப்பதை விட வேறு எதுவும் நிகழாது!

ஓட்டுக்கு காசு வாங்கும் டோக்கன் வாங்கும் மக்களின் மனநிலை மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் முகத்திரையை கிழித்து, லஞ்சம் மறுக்க வேண்டும், இறந்த பெண்களின் வலியில், தங்கள் வீட்டுப் பெண்களின் முகங்களை காணவேண்டும், உள்ளம் பதைக்க வேண்டும், இதெல்லாம்
நடக்காத வரை, அதே கொலைகாரர்கள், அதே காவல்துறை, அதே நீதித்துறை, அதே அரசியல்வாதிகள்!

அப்படியென்றால் உடல் வலிமைக்கொண்ட ஆண்களின் எல்லா வாதைகளுக்கும், பெண்ணுடலும் உயிருமே தீர்வா என்று கேட்பவர்களுக்கு இந்தச்செய்தி, “வலிமைமிக்க ஆண் சிங்கத்தை, வரலாற்றில் முதன்முறையாக அதன் துணை சிங்கமான பெண்சிங்கம் கடித்து கொன்றிருக்கிறதாம்!” மாறுபட்டச் சூழல் அந்தச் ஆண்சிங்கத்தை பலியாக்கி இருக்கும்போது, நலிந்த இந்த மாறுபட்டச் சூழலில், ஆண்களுக்கும் ஒழுக்கம் போதித்து, பெண்களை சிங்கங்களாக வளர்த்தால்தான் என்ன? சிங்கங்களாக வளர்த்தால்தான் என்ன?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!